ஆம், இல்லை, மிக்க நன்று!
தாம் கேள்விப்படும் ஆங்கிலச் சொற்களைக் கொண்டு மேலோட்டமாக மொழி அறிவு பெற்ற ஒரு கிராமவாசி ஒருவன் இருந்தான். அவனுக்கு ‘எஸ்’ (ஆம்), ‘நோ’ (இல்லை) மற்றும் ‘வெரி குட்’ (மிக்க நன்று) ஆகிய ஒருசில சொற்கள் மட்டுமே அத்துப்படி. அச்சொற்களை எங்கு, எப்பொழுது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற எவ்விதப் புரிதலும் அவனிடம் இருந்ததில்லை. இருப்பினும், ஆங்கிலம் பேசுபவர்களுக்குச் சமூகம் அளிக்கும் மதிப்பைப் பெற்றிடும் ஆசையில், தகுந்த இடமறியாமல் அந்தச் சொற்களைப் பிறர் முன்னிலையில் உதிர்ப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஒருமுறை, சில கொள்ளையர்கள் ஒரு கொலைச் செயலைச் செய்துவிட்டு, அக்குற்றத்தைச் செய்யாத அந்த அப்பாவிக் கிராமவாசி தான் குற்றவாளி என்று ஜோடித்துத் தப்பிச் சென்றனர்.
வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிபதி அந்தக் கிராமவாசியிடம் வங்க மொழியில், "இந்தக் கொலையை நீதான் செய்தாயா?" என்று வினவினார்.
மூடத்தனமான அந்த நபர், "இந்த நீதிபதி முன்னிலையில் நான் ஆங்கிலத்தில் பேசினால், அவர் என்னை மேலைநாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஒரு கனவான் என்று கருதி எனக்கு மிகுந்த மரியாதை அளிப்பார்; அதன் மூலம் நான் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம்," என்று மனப்பால் குடித்தான்.
அப்படியே தீர்மானித்து, நீதிபதியின் கேள்விக்கு "எஸ்!" (ஆம்) என்று பதிலளித்தான்.
நீதிபதி அடுத்ததாக, "உன்னுடன் வேறு யாராவது இருந்தார்களா?" என்று கேட்டார்.
உடனடியாக அந்த நபர், "நோ!" (இல்லை) என்று பதிலளித்தான்.
இறுதியாக நீதிபதி, "இந்தக் குற்றத்திற்காக நீ சிறைக்குச் செல்ல நேரிடும் என்பது உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
தான் இழைக்காத குற்றத்திற்காகச் சிறைக்குச் செல்வதைத் தடுத்து, தன் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட இதுவே கடைசித் தருணம் என அந்த நபர் எண்ணினான். தான் ஒரு யோக்கியன் என்பதையும், தனக்குச் சிறைத் தண்டனை வழங்கக் கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காகத் தன்னிடமிருந்த இறுதி அஸ்திரத்தைப் பிரயோகித்தான். மிகுந்த பெருமையுடன் நீதிபதியைப் பார்த்து, "வெரி குட்!" (மிக்க நன்று) என்று கூறினான்.
நீதியுரை
ஆன்மீகப் பாதையிலும், பலர் முறையான புரிதல் இன்றி சாத்திர வசனங்களைக் கிளிப்பிள்ளை போலத் தங்குதடையின்றி ஒப்புவிப்பதைக் காண்கிறோம். தூய பக்தர்களிடமிருந்து பெற்ற உபதேசங்களின் உட்பொருளையோ, சமயக் கலைச்சொற்களையோ உணராமல், சமூகத்தில் மற்றவர்கள் தங்களைப் பெரிய அறிஞர்களாகக் கருதிப் போற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள்.
ஆனால், இறுதியில் அவர்களின் நிலை அந்தக் கிராமவாசியைப் போலவே நகைப்பிற்குரியதாகி விடுகிறது. சாத்திரக் கருத்துகளையும், மேலோர்களின் அறிவுரைகளையும் முறையாகச் செரிமானம் செய்து, நம் வாழ்வோடு ஒன்றிணைக்காவிட்டால், நேர்மையான ஆன்மீகச் சமூகம் அத்தகையோரை ஒருபோதும் ஏற்காது. கிளிப்பிள்ளை போலப் பேசும் வெறும் சொற்களால் ஒருவனை ‘மாயை’ எனும் தளையிலிருந்து விடுவிக்க முடியாது.
இன்றைய நாகரிக உலகில், பல போலி அறிஞர்கள் பொதுக் கூட்டங்களிலும், இலக்கிய மேடைகளிலும் பக்தி, பக்தன் மற்றும் பரம்பொருள் குறித்துப் பொருள் புரியாத வெறும் வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசுகின்றனர். தூய பக்தர்களின் பார்வையில் இத்தகைய உரையாடல்கள் அனைத்தும், ‘ஆம், இல்லை, மிக்க நன்று’ என்று உளறிய அந்த நபரையே நினைவுபடுத்துகின்றன. இத்தகையவர்கள் இறுதியில் மாயையின் இரும்புக் கரங்களுக்குள் சிக்கி, பிறவிப் பெருங்கடலில் அல்லற்படவே நேரிடும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

Comments
Post a Comment