ஆம், இல்லை, மிக்க நன்று! தாம் கேள்விப்படும் ஆங்கிலச் சொற்களைக் கொண்டு மேலோட்டமாக மொழி அறிவு பெற்ற ஒரு கிராமவாசி ஒருவன் இருந்தான். அவனுக்கு ‘எஸ்’ (ஆம்), ‘நோ’ (இல்லை) மற்றும் ‘வெரி குட்’ (மிக்க நன்று) ஆகிய ஒருசில சொற்கள் மட்டுமே அத்துப்படி. அச்சொற்களை எங்கு, எப்பொழுது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற எவ்விதப் புரிதலும் அவனிடம் இருந்ததில்லை. இருப்பினும், ஆங்கிலம் பேசுபவர்களுக்குச் சமூகம் அளிக்கும் மதிப்பைப் பெற்றிடும் ஆசையில், தகுந்த இடமறியாமல் அந்தச் சொற்களைப் பிறர் முன்னிலையில் உதிர்ப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருமுறை, சில கொள்ளையர்கள் ஒரு கொலைச் செயலைச் செய்துவிட்டு, அக்குற்றத்தைச் செய்யாத அந்த அப்பாவிக் கிராமவாசி தான் குற்றவாளி என்று ஜோடித்துத் தப்பிச் சென்றனர். வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிபதி அந்தக் கிராமவாசியிடம் வங்க மொழியில், "இந்தக் கொலையை நீதான் செய்தாயா?" என்று வினவினார். மூடத்தனமான அந்த நபர், "இந்த நீதிபதி முன்னிலையில் நான் ஆங்கிலத்தில் பேசினால், அவர் என்னை மேலைநாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஒரு கனவான் என்று கருதி எனக்கு மிகுந்த மரியாத...