பதம் 22
மொழிபெயர்ப்பு
பகவானின் புனித நாம ஜபத்திலிருந்து துவங்கும்
பக்தித் தொண்டுதான், மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடாகும்.
முந்திய சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
போல், உண்மையான சமயக் கோட்பாடென்பது (தர்மம் பாகவதம்), ஸ்ரீமத் பாகவதத்தில் அல்லது
பாகவதக் கல்விக்கு முதற்படியான பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளாகும்
(பாகவதம் தர்மம்). இக்கோட்பாடுகள் யாவை? பாகவதம் கூறுகிறது, தர்ம: ப்ரோஜ்ஜித கைதவோ
‘த்ர: ஸ்ரீமத் பாகவதத்தில் ஏமாற்றுச் சமய முறைகள் இல்லை. பாகவதத்திலுள்ளஅனைத்தும் பரமபுருஷருடன்
நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன. பாகவதம் மேலும் கூறுவதாவது, ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ
யதோ பக்திர் அதோக்ஷஜே: ஆராய்ச்சி அறிவினால் எட்டிப் பிடிக்க முடியாதவரான பரமபுருஷரை
நேசிக்கும் முறையை, எது தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு போதிக்கிறதோ அதுவே பரம தர்மமாகும்.
இத்தகைய ஒரு சமயம், தன் - நாம - க்ரஹண, அதாவது பகவான் புனித நாம ஜபத்திலிருந்து துவங்குகிறது
(ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத ஸேவனம்). பகவானின் புனித நாமத்தைப் பாடிக்கொண்டு
ஆனந்தக் கூத்தாடுபவனால் படிப்படியாக பகவானின் ரூபத்தையும், லீலைகளையும், உன்னத குணங்களையும்
காண முடியும். இவ்விதமாக பரமபுருஷரின் நிலையை ஒருவன் முழுமையாக அறிந்து கொள்கிறான்.
பக்தித் தொண்டை நிறைவேற்றுவதன் மூலமாக மட்டுமே, பகவான் எப்படி ஜட உலகில் அவதரிக்கிறார்,
எப்படி அவர் பிறவிகளை எடுக்கிறார், எத்தகைய செயல்களை அவர் புரிகிறார் என்பதையெல்லாம்
புரிந்து கொள்ளும் நிலைக்கு ஒருவன் வருகிறான். பக்த்யா மாம் அபிஜானாதி: பக்தித் தொண்டைச்
செய்வதாலேயே பரமபுருஷரைப் பற்றிய அனைத்தையும் ஒருவரால் புரிந்துகொள்ள முடியும் என்று
பகவத்கீதை குறிப்பிடுகிறது. அதிர்ஷ்டவசமாக ஒருவன் பரமபுருஷரை இவ்வாறு புரிந்துகொண்டு
விட்டால், அதன் பலன், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம ஸநதி: இந்த ஜட உடலை விட்டவின், மீண்டும்
இந்த ஜட உலகில் அவன் பிறவியெடுக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவன் பரமபதத்திற்குத்
திரும்பிச் செல்கிறான். இதுதான் முடிவான பூரணத்துவம். எனவேதான் கிருஷ்ணர் பகவத்கீதையில்
(8.15) பின்வருமாறு கூறுகிறார்:
“பக்தியில் யோகிகளான சிறந்த ஆத்மாக்கள் என்னை
அடைந்த பிறகு, துன்பம் நிறைந்ததும், நிலையற்றதுமான இந்த உலகிற்குத் திரும்பி வருவதேயில்லை.
ஏனெனில் அவர்கள் மிகவுயர்ந்த பூரணத்துவத்தை அடைந்துவிட்டவர்களாகின்றனர்.”

Comments
Post a Comment