மொழிபெயர்ப்பு
யோக முறையைக்
கொண்டு புலனடக்கத்தைப் பயில்வதால், ஒருவர் ஆசை மற்றும் காமம் ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து
விடுபடமுடியும் என்பது உண்மைதான். ஆனால் ஆத்மாவை திருப்திப்படுத்துவதற்கு இது போதுமானதல்ல.
ஏனெனில் இது (திருப்தி) பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டினால் மட்டுமே அடையப்படுவதாகும்.
யோகம் புலன்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது. அமர்தல், சிந்தித்தல், உணர்தல், விரும்புதல், மனதைக் குவித்தல், தியானம்
செய்தல், இறுதியாக தெய்வீகத்தில் ஐக்கியமாகி விடுதல் ஆகிய தேகாப்பியாசங்களைக் கொண்ட
யோக முறையைப் பயில்வதால், புலன்களைக் கட்டுப்படுத்த முடியும். புலன்கள் விஷமுள்ள பாம்புகளாகக்
கருதப்படுகின்றன. அவற்றை அடக்குவதற்காகவே யோக முறை உள்ளது. மாறாக புலன்களை அடக்கும்
மற்றொரு முறையை நாரதர் சிபாரிசு செய்கிறார். இது பரம புருஷ பகவானாகிய முகுந்தனின் உன்னத
அன்புத் தொண்டில் ஈடுபடும் முறையாகும். புலன்களை செயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதைவிட
பகவானின் பக்தித் தொண்டு முறை நடைமுறைக்கேற்றதும், அதிக சக்தி வாய்ந்ததுமாகும் என்று
தமது அனுபவத்தின் மூலமாக நாரதர் கூறுகிறார். பகவான் முகுந்தனின் தொண்டில் புலன்களை
ஈடுபடுத்துவது தெய்வீகமான முறையாகும். புலன்களுக்கு சில ஈடுபாடுகள் தேவைப்படுகின்றன.
செயற்கையான புலனடக்கம் உண்மையான புலனடக்கமாகாது. ஏனெனில், புலனின்பத்திற்கு ஏதேனும்
சந்தர்ப்பம் கிடைத்த உடனேயே, பாம்பைப் போன்ற புலன்கள் அதை நிச்சயமாக பயன்படுத்திக்
கொள்கின்றன. விஸ்வாமித்திர முனிவர் மேனகையின் அழகிற்கு அடிமையானார். இதைப் போன்ற பல
சம்பவங்கள் சரித்திரத்தில் உள்ளன. ஆனால் சிறந்த பக்தரான ஹரிதாஸ் தாகுரரை, அழகாக ஆடை
அணிந்திருந்த மாயா தேவி நள்ளிரவு நேரத்தில் மயக்கப் பார்த்தாள். இருப்பினும் அவரை அவளால்
தனது வலையில் விழ்த்த முடியவில்லை. முக்கியமான கருத்து என்னவென்றால், பகவானின் பக்தித்
தொண்டு இல்லாமல் யோக முறையோ அல்லது கற்பனையான வறட்டுத் தத்துவமோ ஒருபோதும் வெற்றியடையாது
என்பதாகும். பலனை எதிர்பார்க்கும் செயல், அஷ்டாங்க யோகம் அல்லது கற்பனையான வறட்டுத்
தத்துவம் ஆகியவற்றின் கலப்படமில்லாத, பகவானின் தூய பக்தித் தொண்டுதான் தன்னுணர்வை அடைவதற்குரிய
மிகச்சிறந்த மார்க்கமாகும். இத்தகைய தூய பக்தித் தொண்டு உன்னத நிலையில் உள்ளதாகும்.
மேலும் யோக மற்றும் ஞான மார்க்கங்கள் இத்தகைய பக்தி மார்க்கத்திற்குக் கீழானவையே ஆகும்.
தெய்வீகமான பக்தித் தொண்டுடன் கீழான ஒரு முறை கலக்கப்படும்பொழுது, அது தொடர்ந்து தெய்வீகமானதாக
இருப்பதில்லை. அது கலப்படமான பக்தித் தொண்டு என அழைக்கப்படுகிறது. ஸ்ரீமத் பாகவதத்தின்
ஆசிரியரான ஸ்ரீல வியாசதேவர், தெய்வீக தன்னுணர்வுக்குரிய இவ்வெல்லா முறைகளைப் பற்றியும்
இந்நூலில் படிப்படியாக விளக்குகிறார்.
( ஶ்ரீமத் பாகவதம் 1.6.35 )
முக்கியக் கருத்துக்கள்:
புலனடக்கமும் யோக முறையும்
யோகத்தின் நோக்கம்: யோகப் பயிற்சி (அஷ்டாங்க யோகம்) என்பது உடல் பயிற்சிகள், தியானம் மற்றும் மனதைக் குவித்தல் ஆகியவற்றின் மூலம் புலன்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
பாம்பு போன்ற புலன்கள்: மனிதனின் புலன்கள் விஷமுள்ள பாம்புகளுக்கு ஒப்பானவை. அவற்றை அடக்குவதற்கு யோக முறை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
போதாமை: யோகத்தினால் ஆசைகளையும் காமத்தையும் ஓரளவு கட்டுப்படுத்த முடியுமே தவிர, அது ஆத்மாவிற்கு முழுமையான திருப்தியைத் தருவதில்லை.
செயற்கை அடக்கம் vs ஆன்மீக ஈடுபாடு
செயற்கையான கட்டுப்பாடு: புலன்களை வலுக்கட்டாயமாக அடக்குவது நிரந்தரமானதல்ல. சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவை மீண்டும் தடம் புரளும். இதற்கு உதாரணமாக, விஸ்வாமித்திர முனிவர் மேனகையின் அழகில் மயங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது.
முகுந்த சேவை: நாரத முனிவர் புலன்களை அடக்க 'முகுந்த சேவை' எனப்படும் பக்தித் தொண்டினைப் பரிந்துரைக்கிறார். புலன்களுக்குச் சில ஈடுபாடுகள் தேவை; அவற்றை பகவானின் சேவையில் ஈடுபடுத்துவதே இயற்கையான மற்றும் சக்திவாய்ந்த வழியாகும்.
வெற்றிக்குச் சான்று: ஹரிதாஸ் தாகூர் போன்ற சிறந்த பக்தர்கள், மாயாதேவியே நேரில் வந்து மயக்க முயன்றபோதும், பக்தித் தொண்டினால் நிலைதடுமாறாமல் இருந்தனர்.
பக்தித் தொண்டின் மேன்மை
உன்னத மார்க்கம்: தன்னுணர்வை அடைய அஷ்டாங்க யோகம், வறட்டுத் தத்துவங்கள் அல்லது பலன் நோக்கிய செயல்களை விட, தூய பக்தித் தொண்டே மிகச்சிறந்த வழியாகும்.
கீழான முறைகள்: ஞான மார்க்கமும் யோக மார்க்கமும் பக்தி மார்க்கத்திற்கு உட்பட்டவையே. பக்தித் தொண்டுடன் இவை கலக்கப்படும்போது, அது 'கலப்படமான பக்தி' என்று அழைக்கப்படுகிறது.
முடிவுரை: ஸ்ரீமத் பாகவதம் இத்தகைய தூய பக்தித் தொண்டினைப் படிப்படியாக விளக்கி, அதை உயர்ந்த தன்னுணர்வு முறையாக நிலைநாட்டுகிறது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
.jpg)

Comments
Post a Comment