மொழிபெயர்ப்பு
(முந்திய சுலோகத்தில் விவரிக்கப்பட்டதுபோல்)
அறியாமையில் விழுந்துவிட்டவர்களும், மக்களை அழிவுப் பாதையில் தவறாக வழிநடத்திச் செல்பவர்களுமான
தலைவர்களும், குருட்டுத்தனமாக அவர்களைப் பின்பற்றுபவர்களும், உண்மையில் கல்லினால் செய்யப்பட்ட
ஒரு படகில் ஏறிக் கொள்பவர்களைப் போன்றவர்களாவர். கல்லாலான ஒரு படகு மிதக்க முடியாமல்
அதிலுள்ள பயணிகளுடன் நீரில் மூழ்கிவிடும். அதுபோலவே, மக்களைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள்
நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வோரும் நரகத்திற்கே செல்வார்கள்.
பொருளுரை
ஸ்ரீமத் பாகவதம் (11.20.17) பின்வருமாறு குறிப்பிடுகிறது:
பந்தப்பட்ட ஆத்மாக்களாகிய நாம் அறியாமை எனும்
கடலில் விழுந்துவிட்டோம். ஆயினும் ஒரு சிறந்த படகைப் போன்றுள்ள இந்த மனித உடலானது,
அறியாமை எனும் இக்கடலைக் கடப்பதற்குச் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது, கப்பல் தலைவனைப்போல்
செயற்படும் ஓர் ஆன்மீக குருவினால் வழிநடத்தப்படும்போது அந்த படகினால் சமுத்திரத்தை
மிகச் சுலபமாக கடந்து விடமுடியும். அது மட்டுமின்றி வேத ஞானம் எனப்படும் அனுகூலமான
காற்றும், படகு கடலை கடப்பதற்கு உதவி புரிகிறது. அறியாமை எனும் கடலைக் கடப்பதற்கான
இவ்வசதிகளையெல்லாம் நன்கு பயன்படுத்திக் கொள்ளாதவன் தற்கொலை செய்து கொள்பவனாவான்.
கல்லாலான ஒரு படகில் ஏறுபவன் ஆபத்தைச் சந்திக்கிறான்.
பூரணத்துவ நிலைக்கு உயர்வதற்கு, கல்லாலாகன படகுகளில் ஏற்றிச் செல்லும் பொய்யான தலைவர்களை
மக்கள் முதலில் கைவிட வேண்டும்.
மனித சமுதாயம் முழுவதுமே இத்தகைய ஒரு ஆபத்தான
நிலையில் இருக்கிறது. இந்நிலையில் காப்பாற்றப்படுவதற்கு வேதங்களின் உபதேசங்களை அது
பின்பற்றியே ஆக வேண்டும். இத்தகைய உபதேசங்களின் சாராம்சம் பகவத்கீதையின் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மனித வாழ்வின் இலட்சியத்தை நிறைவேற்றுவது எப்படி என்பதைப் பற்றிய நேரடியான உபதேசங்களை
பகவத் கீதை அளிக்கிறது. எனவே வேறெந்த உபதேசங்களையும் ஒருவர் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
எனவேதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ: “எல்லாவிதமான
சமய முறைகளையும் கைவிட்டு என்னிடம் மட்டும் சரணடைவாயாக” என்று கூறுகிறார். பகவான் ஸ்ரீ
கிருஷ்ணரைப் பரமபுருஷராக ஒருவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அவரது உபதேசங்கள் மனித
குலத்திற்கு மிகச் சிறந்த நன்மையை அளிப்பவையாக இருப்பதால், அவரது உபதேங்களைப் பின்பற்றுவதாலேயே
ஒருவனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லையெனில் அதிகாரப் பூர்வமில்லாத
தியான முறையினாலும், யோகப் பயிற்சி என்ற பெயரில் நிலவிவரும் உடற்பயிற்சி முறைகளினாலும்
ஒருவன் ஏமாற்றப்படுவான். இவ்விதமாக அவன் கல்லாலான படகில் ஏறி அதிலுள்ள பயணிகளுடன் சேர்ந்து
நீரில் மூழ்கிவிடுவான், துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கர்கள் இந்த பௌதிக சிக்கலிலிருந்து
வெளியேறுவதில் மிகவும் ஆவல் கொண்டவர்களாக இருப்பினும், சில சமயங்களில் அவர்கள் கல்
படகுகளைத் தயாரிப்பதற்கும் ஆதரவாக இருப்பதை நாம் காண்கிறோம். அது அவர்களுக்கு எவ்விதத்திலும்
உதவியாக இருக்காது, கிருஷ்ண பக்தி இயக்கத்தின் வடிவில் கிருஷ்ணரால் அளிக்கப்பட்டுள்ள
சரியான படகை அவர்கள் தஞ்சமடைய வேண்டும். அப்பொழுது அவர்கள் சுலபமாக காப்பாற்றப்படுவார்கள்.
இது தொடர்பாக ஸ்ரீ விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர் பின்வருமாறு கருத்துரைக்கிறார்: அஸ்மமய:
ப்லவோ யேஷாம் தே யதா மஜ்ஜந்தம் ப்லவம் அனுமஜந்தி ததேதி ராஜ-நீதி-உபதேஸ்ட்ருஷு ஸ்வ-ஸப்யேஸு
கோபோ வ்யஞ்ஜித: அரசியல் தந்திரத்தினால் சமுதாயம் வழிநடத்தப்படுமானால், அது கல்லாலான
ஒரு படகைப் போல் மூழ்கிவிடும் என்பது நிச்சயம். அரசியல் தந்தரத்தால் மனித சமுதாயத்தை
காப்பாற்ற முடியாது. மனித வாழ்வின் இலட்சியத்தைப் புரிந்து கொள்வதற்கும், கடவுளைப்
புரிந்து கொள்வதற்கும், மனித வாழ்வின் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் மக்கள்
கிருஷ்ண உணர்வைப் பின்பற்ற வேண்டும்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 6.7.14 / பொருளுரை வழங்கியவர்
ஶ்ரீல பிரபுபாதர் )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

Comments
Post a Comment