அசுரராஜன், இரண்யகசிபு
பரமபுருஷர் வராக மூர்த்தியாகத் தோன்றி இரண்யகசிபுவின் தமயனான இரண்யாக்ஷனைக் கொன்றபொழுது, இரண்யகசிபு மிகவும் வருத்தமடைந்தான். பரமபுருஷர் அவரது பக்தர்களிடம் பாரபட்சம் உடையவர் என்று கோபத்துடன் குற்றம் சாட்டிய அவன், தன் சகோதரனைக் கொல்வதற்காக வராக மூர்த்தியாகத் தோன்றிய பகவானை ஏளனம் செய்தான். அவன் எல்லா அசுரர்களையும், இராட்சஸர்களையும் கிளர்ந்தெழச் செய்து, அமைதிமிக்க முனிவர்களின் மற்றும் பிற மண்ணுலக வாசிகளின் வேதக் கிரியைகளுக்கு இடையூறு விளைவித்தான். யாகங்கள் நின்றுவிட்ட காரணத்தால் தேவர்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் மண்ணுலகில் சஞ்சரிக்கத் துவங்கினர்.

தன் சகோதரனின் ஈமக்கிரியைகளை முடித்தபின் இரண்யகசிபு தன் மருமகன்களிடம் வாழ்வின் உண்மையைப் பற்றி சாஸ்திரங்களிலிருந்து எடுத்துக்கூறத் தொடங்கினான். அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பின்வருமாறு அவன் பேசினான்: “அன்புள்ள மருமகன்களே! வீரர்களுக்குப் பகைவர்களின் முன்னிலையில் மடிவது புகழ் சேர்ப்பதாகும். வெவ்வேறு கருமங்களுக்கேற்ப ஜீவராசிகள் இந்த ஜட உலகினுள் ஒன்று சேர்ந்து, இயற்கைச் சட்டங்களினால் மீண்டும் பிரிக்கப்படுகின்றனர். ஆனால் உடலிலிருந்து வேறுபட்டதான ஆன்மீக ஆத்மா நித்தியமானது, எதனாலும் பாதிக்கப்படாது, தூய்மையானது, எங்கும் நிறைந்தது மற்றும் அனைத்தையும் அறிந்திருப்பது என்பதை எப்பொழுதும் நாம் அறிந்திருக்க வேண்டும். ஆத்மாவானது ஜட சக்தியால் கட்டப்பட்டுள்ள பொழுது வெவ்வேறு சகவாசத்திற்கேற்ப உயர்ந்த அல்லது தாழ்ந்த உயிரினங்களில் பிறவிகளை எடுக்கிறது. இவ்விதமாக இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிப்பதற்குரிய வெவ்வேறு வகையான உடல்களை அது பெறுகிறது. பௌதிக வாழ்வின் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதே ஒருவனது இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணமாகிறது; வேறு காரணங்கள் இல்லை. கருமத்தின் மேலோட்டான செயல்களைக் கண்டு ஒருவன் கலங்கி விடக் கூடாது.”

இரண்யகசிபு பிறகு உசீனரம் என்ற நாட்டில் வாழ்ந்துவந்த சுயக்ஞர் என்ற அரசரின் வரலாற்றைக் கூறினான். அந்த அரசன் கொல்லப்பட்ட பொழுது துக்கத்தில் ஆழ்ந்திருந்த அவனது ராணிகள் உபதேசங்களைப் பெற்றனர். அவற்றை இரண்யகசிபு தன் மருமகன்களுக்கு எடுத்துக் கூறினான். குலிங்கப் பறவையொன்று எப்படி தன் மனைவிக்காக வருந்திக் கொண்டிருக்கும் பொழுது, தன் மனைவியைக் கொன்ற வேடனின் அம்பினால் துளைக்கப்பட்டது என்ற வரலாற்றையும் இரண்யகசிபு விவரித்தான். இவ்வாறாக இக்கதைகளைக் கூறியதன் மூலம் தன் மருமகன்களையும் மற்ற உறவினர்களையும் சமாதானப்படுத்தி அவர்களது துக்கத்தை அகற்றினான். இவ்வாறு சமாதானப்படுத்தப்பட்ட தாய் திதியும் சகோதரன் மனைவியான ருஷபானுவும் தங்களுடைய மனங்களை ஆன்மீக விஷயத்தில் ஈடுபடுத்தினர்.
இரண்யகசிபு சாகாவரம் பெறும் திட்டம்
இரண்யகசிபு மரணமற்றவனாக ஆக விரும்பினான். யாராலும் ஜெயிக்கப்பட முடியாதவனாகவும், முதுமையாலும் நோயினாலும் பீடிக்கப்படாதவனாகவும், எதிரியற்றவனாகவும் ஆக விரும்பினான். இவ்வாறாக அவன் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் சக்ரவர்த்தியாக ஆக விரும்பினான். இந்த விருப்பத்துடன் மந்தரமலைப் பள்ளத்தாக்கில் பிரவேசித்த அவன், ஒருவித கடுந்தவத்தையும், தியானத்தையும் செய்யத் துவங்கினான். இரண்யகசிபு இத்தவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட தேவர்கள் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினர். ஆனால் இரண்யகசிபு இவ்வாறு ஈடுபட்டிருந்த பொழுது, ஒருவித நெருப்பு ஜுவாலை அவனது தலையிலிருந்து வெளிப்பட்டு முழு பிரபஞ்சத்தையும், அதன் வாசிகளையும், பறவைகளையும், மிருகங்களையும் மற்றும் தேவர்களையும் தொந்தரவு செய்தது.
மேலுலகங்களிலும், கீழுலகங்களிலும் வாழ முடியாதபடி வெப்பம் மிகுந்துவிட்டதால், தொல்லைக்குள்ளான தேவர்கள் உயர்க்கிரகங்களிலுள்ள தங்களுடைய வசிப்பிடங்களை விட்டுவிட்டு, பிரம்மதேவரைக் காணச் சென்றனர். தேவையற்ற அந்த வெப்பத்தைக் குறைக்கும்படி அவரிடம் வேண்டினர். சாகாவரம் பெறவும், தனது குறுகிய ஆயுளை வெல்லவும், துருவலோகம் உட்பட எல்லாக் கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கவும் ஆவல் கொண்ட இரண்யகசிபுவின் நோக்கத்தை அவர்கள் பிரம்ம தேவரிடம் கூறினர்.
இரண்யகசிபுவினுடைய கடுந்தவத்தின் நோக்கத்தைப் பற்றி கேட்ட பிரம்ம தேவர், மாமுனிவரான பிருகுவுடனும் சக்திவாய்ந்தவரான தட்சனுடனும் இரண்யகசிபுவைக் காணச் சென்றார். அங்குச் சென்றதும் பிரம்மா தனது கமண்டலத்திலுள்ள நீரை இரண்யகசிபுவின் தலை மேல் தெளித்தார்.
தைத்திய ராஜனான இரண்யகசிபு, இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்கர்த்தாவான பிரம்மதேவர் முன் சிரம் தாழ்த்தி, மீண்டும் மீண்டும் வணங்கிப் பிரார்த்தனைகள் செய்தான். பிரம்மதேவரும் அவனுக்கு வரங்கள் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். அப்பொழுது அவன், தான் எந்த ஜீவராசியாலும் கொல்லப்படக் கூடாது என்றும், உள்ளேயும், வெளியேயும் உள்ள எந்த இடத்திலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்றும், பகலிலோ அல்லது இரவிலோ தனக்கு மரணம் உண்டாகக் கூடாது என்றும், எந்த மனிதனாலோ, மிருகத்தாலோ, தேவனாலோ, அல்லது அசையும் அசையாத வேறெந்த ஜீவராசியாலோ தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்றும் அவன் வேண்டினான். மேலும் அவன் முழு பிரபஞ்சத்திற்கும் தான் தலைமை அதிகாரத்தைப் பெறவேண்டும் என்றும் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை அடைய வேண்டும் என்றும் வேண்டினான்.
தொடரும்...
நாளை: இரண்யகசிபு பிரபஞ்சத்தைப் பீதியடையச் செய்தல்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment