சரஸ்வதி நதியின் கரையோரத்திலுள்ள தனியிடத்தில் அமர்ந்த வியாஸ தேவர் மிக ஆழ்ந்து யோசிக்கலானார். பின் அவர் தனக்குள்ளேயே கூறிக்கொண்டார்... "நான் என்னுடைய ஆன்மீகக் கடமைகளை முறையாகப் பின்பற்றி வருகிறேன். பக்குவமான முறைகளில் வேதங்களையும், ஆன்மீக குருவையும் வணங்கி வருகிறேன். வேதத்தை நான்காகப் பிரித்துள்ளேன், எளிய மக்களும் புரிந்து பயன் பெறும் விதமாக மஹாபாரதத்தையும் எழுதியுள்ளேன். எனினும் என் மனம் முழுமையை உணரவில்லையே?"
"ஏன் என்னுடைய இதயம் திருப்தியை உணரவில்லை?..
இவ்வாறு நேர்மையான அவரது சுய பரிசோதனை மூலமாக ஸ்ரீல வியாஸ தேவர் தன்னுடைய அதிருப்திக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முனைந்தார். அவர் நினைத்தார், " பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத லீலைகள் மற்றும் பக்தி அதாவது பகவான் கிருஷ்ணருக்குச் செய்யும் அன்புத் தொண்டு, அதுவே அனைத்து உயிர்வாழிகளின் இயல்பான நிலை. அத்தகைய தூய பக்திப்பாதையே தூய பக்தர்களையும் , பகவானையும் திருப்திப்படுத்தும்." இவையெல்லாம் என்னுடைய சரிதங்களில் போதுமான அளவு நான் விவரிக்கவில்லை.. ஒருவேளை அதுதான காரணமாக இருக்குமோ?
ஸ்ரீல வியாஸ தேவர் இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கையில், அவருடைய ஆன்மீக குருவான ஸ்ரீ நாரத முனி அவரது ஆஸ்ரமத்திற்கு வருகை புரிந்தார். உடனே வியாஸ தேவர் மரியாதையோடு எழுந்து தனது ஆன்மீக குருவை வரவேற்று வணங்கினார். ஸ்ரீ நாரத முனிவர் வியாஸ தேவரின் நிலையையும், அவருடைய அதிருப்திக்கான காரணத்தையும் நன்கு அறிந்திருந்தார். அதனால் புன்னகைத்தவாறு கூறினார், "அன்பு வியாஸ தேவரே, "நீங்கள் இயற்றியுள்ள சரிதங்களில் பக்திப்பாதையின் மகிமைகளை போதுமான அளவு குறிப்பிடவில்லை. மேலும் பகவானி ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத லீலைகள் குறித்தும் விரிவாக விளக்கவில்லை. தயவு செய்து இப்போதே அதை செய்யுங்கள். அதன் பிறகே உங்களது இதயம் திருப்தியடையும்". ஏனெனில் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அற்புதமான மற்றும் மகோன்னதமான செயல்களை பக்குவமற்ற முறையில் விவரித்தால் கூட அந்த சரிதமானது புனித சாதுக்களால் பாராட்டப்படுகிறது".
"பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அவருடைய தூய பக்தர்களின் உன்னத லீலைகளைப் பற்றிக் கேட்பதும், படிப்பதும்,, எழுதுவதும், பேசுவதும் இதயத்திற்கு திருப்தி தரும் இன்பமான அனுபவமாகும்".
இவ்வாறூ ஸ்ரீல வியாஸ தேவர் தனது சுய பரிசோதனை மூலமாகவும், ஸ்ரீ நாரத முனி மீண்டும் அதனை உறுதிப்படுத்தியதன் மூலமாகவும் தன்னுடைய அதிருப்திக்கான காரணத்தைப் புரிந்து கொண்டார்.
மேலும் வியாஸ தேவரை ஊக்குவிக்க நாரதர் தனது சொந்த கடந்த கால வாழ்க்கையை விவரித்தார். "என்னுடைய முன் ஜென்மத்தில் நான் ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தேன், ஆனால் "பக்தி வேதாந்திகள்" என்று அழைக்கப்படும் மாபெரும் பக்தர்களின் புனிதமான சகவாஸம் காரணமாக, நான் பக்தியைப் பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்பட்டேன். இவ்வாறு நான் நாரத முனியாக ஏற்றம் பெற்று ஆன்மீக உடலை அடையப் பெற்றேன். பக்தியின் தீவிரப்பயிற்சியின் விளைவு நித்தியமானதாகும். பக்தியின் மூலம் ஒருவன் பரம புருஷ பகவானுடைய அடைக்கலத்தை அடையப்பெறுவதோடு, அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான். பக்தி பாவகரமான வாழ்க்கை வாழும் மக்களைக் கூட நல்லொழுக்கம் உடையவர்களாக மாற்றுகிறது. எனவே ஸ்ரீமத் பாகவதத்தை எழுதுங்கள், அதில் பக்திப்பாதையை தெளிவாக வலியுறுத்துங்கள்". இவ்வாறு ஸ்ரீ நாரதர் வியாஸ தேவரின் மனதிற்கு மாபெரும் தெளிவைத் தந்ததோடு, மேற்கொண்டு ஸ்ரீமத் பாகவதத்தை எழுதுவதற்கு விசேஷ வழிகாட்டுதலையும் தந்தார். இவ்வாறு வியாஸ தேவருக்கு அறிவுறுத்திய நாரதர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
"ஒருவர் பெரிய மேதாவியாக இருக்கலாம். அவர்களுக்கும் குழப்பங்கள் வரும். எனவே அக்குழப்பங்களிலிருந்து தெளிவை அடைய பக்குவமான ஒரு நபரின் வழிகாட்டுதல் அவசியமாகும்."
பக்தியின் உன்னத சக்தியைப் பொறுத்தவரை ஸ்ரீ நாரதர் தனிப்பட்ட முறையில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இவ்வாறாக நாரதர், புனிதமான பக்தியையும், பக்தியினால் உன்னத மாற்றமடைந்தவர்களின் வரலாறுகளையும் எழுதும் படி வியாஸ தேவரை தூண்டினார்.
அதன் பிறகு ஸ்ரீல வியாஸ தேவர் பக்தி சிரத்தையுடன் தியானத்தில் அமர்ந்தார். இந்நிலையில் அவரால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மாயை, பகவானது மாயா சக்தியையும் காண முடிந்தது. மாயையின் ஆதிக்கத்தினால் மக்கள் அவதியுறுவதையும் அவரால் காண முடிந்தது. இத்துன்பங்கள் அனைத்திற்கும் பக்தி அல்லது பகவானுக்கு அன்புடன் சேவை செய்வது ஒன்றே ஒரே தீர்வு என்பதையும் உணர்ந்தார். இவ்வாறு அவர் ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றினார். அதில் உன்னத பக்திப் பாதையைக் குறித்தும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான செயல்களையும், அவருடைய பல்வேறு அவதாரங்களையும், அவருக்குப் பிரியமான அவரது பக்தர்களைக் குறித்தும் மிகத் தெளிவாக விவரித்தார். இப்போது அவரது இதயம் முழுவதுமாக திருப்தியடைந்திருந்தது. பின்னாளில் அவர் தனது மகனான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமிக்கு இந்த ஸ்ரீமத் பாகவதத்தை போதித்தார்.
வழிகாட்டுதல் (கதை உணர்த்தும் பாடம்)
அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டி தேவை. நலன் விரும்பிகளான குருமார்கள் தங்களது சீடர்களை சரியான பாதைக்கு வழிகாட்டுகின்றார்கள். வியாஸ தேவர் மிகவும் உயர்ந்த, பக்குவமான தளத்தில் இருந்தாலும் அவருக்கும் கூட நாரத முனிவரின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது. நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றோம். ஆனால் அது ஒரு எல்லை வரை மட்டுமே, மற்ற நேரங்களில் நாம் குழப்பத்திலேயே இருக்கின்றோம். ஆனால் அனுபவம் வாய்ந்த பெரியோர்கள் அல்லது ஆசிறியர்களிடம் சரணடைந்து அவர்களிடமிருந்து மேலும் நாம் கற்றுக் கொள்ள தயாறாக இருக்கும்போது நமது அறிவு பெருகி குழப்பங்களை சமாளித்து வெளிவர முடியும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

 
    .jpg)
.jpg)
.png)

Comments
Post a Comment