பரம புருஷ பகவான், மிகவும் தூய்மையானவரும், மேலானவரும், பரம சக்தியமுமாவார் என்று
பகவத் கீதை கூறுகிறது. அவரிடத்தில் அணுவளவு பௌதிகத் தன்மையும் இல்லை. இதனால் மிகச்சிறிய பௌதிக பற்று உள்ளவரும்கூட அவரை அணுக முடியாது. குறைந்தது ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்தாவது ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும். அந்த நிலையில்தான் பக்தித் தொண்டின் ஆரம்பமே துவங்குகிறது. காமத்திலிருந்தும், பேராசையிலிருந்தும்
விடுபட்டிருப்பதே ரஜோ மற்றும் தமோ
குணங்களில் இருந்து ஒருவர் விடுபட்டிருப்பதற்கான அறிகுறியாகும். அதாவது, புலனின்ப ஆசைகளிலிருந்தும், புலனுகர்வுக்கான பேராசைகளில் இருந்தும் ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும். சமநிலையிலுள்ள இயற்கைக் குணம் சத்வகுணமாகும். எல்லா
பௌதிக களங்கங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதென்பது, சத்வகுணத்திலிருந்தும் விடுபட்டிருப்பதாகும்.
தனிமையாக ஒரு காட்டில் பகவானின் தரிசனத்தை தேடுவதென்பது சத்வகுணத்திலுள்ள ஒரு செயலாகும். ஆன்மீக பூரணத்துவத்தை அடைய ஒருவர் காட்டிற்குப் போகக்கூடும். இதனால் அவர் பகவானை அங்கு
நேரடியாகக் காண முடியும் என்பது பொருளல்ல. ஒருவர் எல்லா
பௌதிகப் பற்றுகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டு, தெய்வீகமான படியில் நிலைபெற்றிருக்க வேண்டும். இந்நிலை மட்டுமே பரம புருஷ பகவானுடன் பக்தன் நேரடியாக தொடர்புகொள்ள உதவும். பகவானின் உன்னதமான வடிவம் வழிபாடு செய்யப்படும் இடத்தில் வசிப்பதுதான் இதற்கு மிகச்சிறந்த வழியாகும். பகவானின் ஆலயம் ஒரு தெய்வீகமான இடமாகும். ஆனால் காடோ
பௌதிக வாழ்வுக்கேற்ற நற்குணம் பொருந்திய ஓரிடமாகும். புதிய பக்தனொருவன், காட்டிற்குச் சென்று பகவானைத் தேடியலைவதைவிட, பகவானின் விக்கிரக வழிபாட்டில் எப்பொழுதும் ஈடுபட
வேண்டுமென்று சிபாரிசு செய்யப்படுகிறது. ஸ்ரீ
நாரதரின் தற்போதைய வாழ்வு எல்லா
பௌதிக ஆசைகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டதாகும். இந்நிலையில், ஒவ்வொரு இடத்திற்கும் செல்வதாலேயே அந்த இடத்தை நாரதரால் வைகுண்டமாக மாற்றிவிட முடியும் என்றாலும், அவர்
காட்டிற்குச் செல்வதில்லை. மக்கள், தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள், முனிவர்கள் முதலான மற்றெல்லோரையும் பகவானின் பக்தர்களாக மாற்றுவதற்காக அவர் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு பிரயாணம் செய்கிறார். அவரது இத்தகைய செயல்களால், பிரகலாத மகாராஜனையும், துருவ மகாராஜனையும் போன்ற
பலரை அவர் பகவானின் உன்னத
அன்புத் தொண்டில் ஈடுபடுத்தி இருக்கிறார். ஆகவே, பகவானின் தூய
பக்தரொருவர், நாரதரையும், மற்றும் பிரகலாதனையும் போன்ற சிறந்த பக்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ‘கீர்த்தனம்’ என்ற முறையினால் பகவானை போற்றிப் புகழ்வதற்காக தனது
முழு நேரத்தையும் ஈடுபடுத்தி விடுகிறார். இத்தகைய பிரசார முறை
எல்லா பௌதிக குணங்களுக்கும் மேற்பட்டதாகும்.
ஶ்ரீமத் பாகவதம் 1.6.21 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
.jpg)
 
    .jpg)
.png)

Comments
Post a Comment