ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே” ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே.
இது எல்லை கடந்த ஒலி அதிர்வு. மனக்கண்ணாடியில் படிந்திருக்கும் மாசைத் துடைக்க நமக்கு உதவுவது. நியூயார்க் நகரின் இரண்டாவது சாலையில் நெருக்கமான வாகனப் போக்குவரத்து காரணமாக எல்லாப் பொருட்களின் மீதும் தூசியும் புகைக் கரியும் படிந்திருப்பது போல் நம் மனக் கண்ணாடியின் மீதும் உலக வாழ்வு சார்பான அழுக்கைப் படிய விட்டிருக்கிறோம். இவ்வுலகில் நம் நடவடிக்கைகளை நாம் கையாளும் விதம் காரணமாக நம் மனமெனும் தெளிவான கண்ணாடியில் பெருமளவில் தூசி சேர்ந்து அதன் விளைவாக நம்மால் எதையும் சரியான வடிவில் பார்க்க முடிவதில்லை. இந்த எல்லை கடந்த ஒலி அதிர்வு (ஹரே கிருஷ்ண மந்திரம்) தூசியை அகற்றி நம் உண்மையான அமைப்பிலான நிலையில் நம்மை நாம் தெளிவாகக் காண உதவுகிறது.
“நான் இந்த உடலில்லை; நான் ஆன்மா, உணர்வு என் சின்னம்” என்று நாம் இருத்திக் கொள்ள முடிகிறது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது நம் உணர்வு தெளிவு பெற்று இவ்வுலக இன்னல்களெல்லாம் மறைந்து போகின்றன. இந்த இகவுலகை எப்போதும் எரித்துவரும் தீ ஒன்றுண்டு; அதை அணைக்க எல்லோரும் முயல்கிறார்கள். ஆனால் நாம் பரிசுத்த உணர்வு நிலையில் ஆன்மீக வாழ்வில் நின்றாலொழிய உலக வாழ்வு சார்ந்த இன்னல்களெனும் இத்தீயை அணைக்கும் வாய்ப்பில்லை.
கிருஷ்ண பகவான் இம்மண்ணுலகில் அவதரித்ததற்கு, தோன்றியதற்கான நோக்கங்களில் ஒன்று தர்மத்தை நிலைநாட்டி, உலகத்தை வாட்டி வரும் புலன் சார் வாழ்வு நிலையெனும் தீயை அணைப்பதுவே.
“யதா யதாஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்.”
(ப.கீ 4.7)
“பரித்ராணாய சாதூனாம்
வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே.”
(ப.கீ 4.8)
“பரதனின் வழிவந்தவனே, எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போது நானே அவதரிக்கிறேன். சாதுக்களைக் காக்கவும் துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை மீண்டும் ஸ்தாபிக்கவும் நான் யுக யுகமாகத் தோன்றுகிறேன்.” (ப.கீ 4.7-8)
இந்தச் செய்யுளில் ‘தர்மம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ஆங்கிலத்தில் பலவிதமாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். சில சமயங்களில் இது ‘நம்பிக்கை’ என்ற பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் வேத இலக்கியங்களின்படி ‘தர்மம்’ என்பது ‘நம்பிக்கை’ ஆகாது. நம்பிக்கை மாறலாம், ஆனால் தர்மத்தை மாற்ற முடியாது. நீரின் திரவத்தன்மையை மாற்ற இயலாது. அதை மாற்றினால், உதாரணமாக நீர் கட்டியானால், அது தண்ணீரிலிருந்து வேறுபட்டதாகும். நம்முடைய தர்மம், அதாவது நமக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் நிலையென்னவென்றால், நாம் பரம்பொருளின் அம்சம். ஆகவே நம் உணர்வை இறைவனோடு இழைத்துப் பணிந்திருத்தல் வேண்டும்.
மேற்காப்பிட்ட “பரித்ராணாய சாதூனாம்” என்று துவங்கும் செய்யுளில் வரும் ‘சாது’ எனும் சொல் புனிதமான, துறவு நிலையை அடைந்த ஒருவரைக் குறிக்கும். துறவி சகிப்புத்தன்மையுள்ளவர். பிறரிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர், எல்லா உயிரினங்களுக்கும் நண்பன், யாரிடமும் பகை கொள்ளாதவர், எப்போதும் அமைதியாயிருப்பவர். துறவியிடம் இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள் இருபத்திரண்டு. பகவத் கீதையில் ஶ்ரீ கிருஷ்ணரே அளித்திருக்கும் தீர்ப்பாவது:
“அபி சேத் ஸுதுராசாரோ
பஜதே மாம் அனன்ய - பாக்
சாதுர் ஏவ ஸ மந்தவ்ய
ஸம்யக் வ்யவ ஸிதோஹி ஸ:”
“ஒருவன் மிகவும் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்திருந்தாலும், என்னை துதி செய்து சேவிப்பவனாகவிருந்தால் அவனைப் புனிதமானவன் என்றே கருதவேண்டும், ஏனெனில் அவன் முழுமையான நிலையில் அமர்ந்திருக்கிறான்.” (ப.கீ 9.30)
உலக ரீதியாகப் பார்த்தால், ஒருவர் நல்லொழுக்கமென்று கருதுவதை மற்றொருவர் தீயவொழுக்கமென்றும் தீயவொழுக்கமென்று ஒருவர் எண்ணுவதை மற்றொருவர் நல்லொழுக்கமென்றும் எண்ணுவதைப் பார்க்கிறோம். இந்துக்களின் கோட்பாட்டின்படி மது அருந்துவது தவறு, ஆனால் மேல் நாட்டவர் அதைத் தவறாகக் கருதுவதில்லை. அங்கு அது சர்வ சாதாரணம். எனவே ஒழுக்கமென்பது காலம், இடம், சூழ்நிலை, சமூக அந்தஸ்து, இவற்றைப் பொறுத்தது. ஆனால் எல்லா சமூகங்களிலும் நல்லொழுக்கம், தீயொழுக்கம் பற்றிக் கோட்பாடுகள் உண்டு. இந்தச் செய்யுளில் கிருஷ்ணர் கூறுவதாவது: ஒருவன் தீய செயல்கள் புரிந்தாலும், அவன் முழுமையாகக் கிருஷ்ண உணர்வில் லயித்திருந்தால், அவனை சாதுவென்றே கருதவேண்டும். வேறு வகையாகச் சொன்னால், கடந்த காலத் தொடர்புகள் காரணமாக ஒருவனிடம் சில தீய பழக்கங்கள் இருந்தாலும் அவன் முழுமையாகக் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்தால், அவனின் அந்தப் பழக்கங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதற்கில்லை. எது எப்படியிருப்பினும், ஒருவன் கிருஷ்ண உணர்வையுடையவனாகும் போது அவன் படிப்படியாகப் புனிதமடைந்து சாதுவாகிறான். கிருஷ்ண உணர்வைச் செயல்படுத்துவதில் முன்னேற்றம் காணும்போது தீய பழக்கங்கள் மறைந்து புனிதத்தன்மை ஏற்பட்டுவிடுகிறது.
இதை விளக்கும் வகையில் ஒரு கதை உண்டு. திருடன் ஒருவன் புண்ணியத் தலமொன்றிற்குத் தீர்த்தயாத்திரை போனான். வழியில் அவனும் மற்ற யாத்திரிகர்களும் ஓரிரவு சத்திரத்தில் தங்கினார்கள். திருடிப் பழக்கப்பட்ட காரணத்தால் திருடன் மற்ற யாத்திரிகர்களின் பொருட்களைத் திருடத் திட்டமிட்டான். ஆனால் எண்ணினான்: “நாமோ தல யாத்திரை போகிறோம். எனவே பிறர் பொருளைத் திருடுவது பொருத்தமாகாது, இல்லை, நான் திருடப்போவதில்லை.” ஆனாலும் கூட பழக்க தோஷத்தால் அவனால் பொருட்களின் மேல் கை வைக்காமலிருக்க முடியவில்லை. எனவே, ஒரு பிரயாணியின் பையை எடுத்து வேறொரு இடத்தில் வைத்தான். இப்படியே இரவு பூராவும் பலரின் சாமான்களைப் பலவிடங்களில் குழப்பி வைத்து விட்டான். ஆனால் அவன் மனச்சாட்சி அவனை உறுத்தியபடியால் அவைகளில் எதையும் அவன் எடுக்கவில்லை. காலையில் மற்றவர்கள் விழித்தபோது தத்தம் மூட்டைகளைக் காணாமல் தவித்தார்கள். பெருங்குழப்பமேற்பட்டது. பின்னர் ஒவ்வொருவராக அவரவர் மூட்டையை வெவ்வேறு இடங்களிலிருந்து எடுத்தார்கள். எல்லாருடைய சாமான்களும் கிடைத்தபின் திருடன் விளக்கினான்: “கனவான்களே, நான் தொழிலால் திருடன். இரவில் திருடிப் பழக்கப்பட்டவனாகையால் உங்கள் பைகளிலிருந்து எதையாவது திருட எண்ணினேன். ஆனால் இப்போது தல யாத்திரை போவதால் திருடுவது சரியல்லவென பைகளை இடம் மாற்றி வைத்துவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.”
தீய பழக்கத்தின் இயல்பு இது. அவன் திருட விரும்பவில்லை. ஆனாலும் பழக்கப்பட்டதால் சில சமயம் அவ்வாறு செய்கிறான். கிருஷ்ணர் சொல்வது என்னவென்றால், தீயவொழுக்கத்தினின்று விலகத் தீர்மானித்து கிருஷ்ண உணர்வில் முன்னேறிக் கொண்டிருப்பவனை, அவன் பழக்க தோஷத்தாலோ, சந்தர்ப்பம் காரணமாகவோ, தவறிவிட்டாலும் அவனை சாது என்றே கருதவேண்டும். ஶ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:-
“க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா
சச்வச் சாந்திம் நிகச்சதி
கௌந்தேய ப்ரதிஜானீஹி
ந மே பக்த: ப்ரணச்யதி”
“அவன் (அப்படிப்பட்டவன்) விரைவில் தர்மாத்மாவாக ஆகி சாச்வதமான சாந்தியை அடைகிறான். குந்தியின் மகனே! என் பக்தன் என்றும் அழிவதில்லையென்று தைரியமாக அறிவிக்கலாம்.” (ப.கீ 9.31)
கிருஷ்ண உணர்வில் தன்னை ஒப்படைத்திருப்பவன் மிகக் குறுகிய காலத்திலேயே புனிதனாகி விடுகிறானென்று ஶ்ரீ கிருஷ்ணர் இங்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்துகிறார். மின்சார விசிறியிலிருந்து மின்னிணைப்பை எடுத்துவிட்டாலும் கூட விசிறி இன்னும் சுற்றிக் கொண்டிருக்கும், ஆனால் விரைவில் சுழற்சி நின்று விடுமென்பதும் தெளிவு. கிருஷ்ணரின் பாதகமலங்களில் சரணடைந்தவர்கள் தம் கர்மவினைகளை இயக்கும் விசையை நிறுத்திவிடுகிறார்கள். இந்த வினைகள் இன்னும் சற்றுத் தொடர்ந்தாலும் விரைவில் அவை குறைந்துவிடுமென்றுதான் கொள்ள வேண்டும். கிருஷ்ண உணர்வை மேற்கொள்பவர்கள் நல்லவர்களாவதற்குத் தனிப்பட்ட முறையில் முயலவேண்டியதில்லை என்பது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு நல்ல தன்மைகள் அனைத்தும் தாமே வரும். கிருஷ்ண உணர்வை அடைந்து விட்டவன் நற்குணங்களையும் ஒருங்கே பெற்று விடுகிறான் என்று ஶ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இறையுணர்வு இல்லாதவனிடம் எத்தனை நற்குணங்களிருந்தாலும் அவை பயனற்றவையாகவே கருதப்படவேண்டும். ஏனென்றால் அவன் விரும்பத்தகாததைச் செய்வதைத் தடுப்பதற்கு வழியில்லை. கிருஷ்ண உணர்வில்லாதவன் புலன் வழிப்பட்ட இந்த உலகில் நிச்சயம் தவறு செய்வான்.
“ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோர்ஜுனா.”
“என் தற்பரமான வருகையையும் செயல்களையும் அறிந்தவன் இந்த உடலை விட்டபின் மீண்டும் இவ்வுலகில் பிறவியெடுக்காமல் என்னுடைய நிலையான வாசஸ்தலத்தை வந்தடைகிறான்.” (ப.கீ 4.9)
கிருஷ்ணருக்கான வழியில் / அத்தியாயம் 2
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

Comments
Post a Comment