Skip to main content

கோபேஷ்வர மகாதேவர்



வைஷ்ணவர்களில் சிறந்தவராகவும் (வைஷ்ணவானாம் யதா ஷம்பு), மகா ராசலீலை மண்டபத்தின் காவலராகவும் விளங்கும் கோபேஷ்வர் மகாதேவரின் தாமரை பாதங்களில் நமது சிரம் தாழ்ந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றோம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான மகா ராசலீலையில் நாம் நுழைவதற்குப் பெருங்கருணையுடன் அனுமதி வழங்குபவர் அவரே.

விருந்தாவனம் என்றாலே அது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய லீலைகள் நடைபெறும் இடமாகும். அங்கே யமுனை நதிக்கரையில், அதீத புனிதம் வாய்ந்த 'வம்சி வடம்' பகுதியில் கோபேஷ்வர் மகாதேவர் திருக்கோவில் அமைந்துள்ளது.  "வைஷ்ணவானாம் யதா ஷம்பு" — வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான். அந்த மகாதேவன், கிருஷ்ண பிரேமையைப் பெறுவதற்காக ஒரு கோபியின் உணர்வில் (பவத்தில்) வீற்றிருக்கும் இடமே இத்தலமாகும்.






ஆலயத்தின் மேன்மையும் தத்துவமும்

விருந்தாவனத்தின் மிகத்தொன்மையான இந்த ஆலயத்தில், சிவபெருமான் சிவலிங்க வடிவில் இருந்தாலும், மாலையில் அவர் கோபி வேடத்தில் அலங்கரிக்கப்படுகிறார். இது வெறும் சடங்கல்ல; மாறாக, பகவான் கிருஷ்ணரின் அந்தரங்க லீலைகளில் பங்கேற்க ஜட உடலோ அல்லது அகங்காரமோ தடையாக இருக்கக்கூடாது என்பதைக் குறிக்கிறது. ஒரு ஜீவன் கிருஷ்ணரின் ராசலீலையில் பங்கேற்க வேண்டுமானால், அவன் தனது 'புருஷ' (அனுபவிப்பவன்) என்ற அகந்தையை விட்டுவிட்டு, கிருஷ்ணருக்குச் சேவை செய்யும் 'தாசன் (சேவகன்) என்ற நிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.


கயிலையிலிருந்து விருந்தாவனம் வரை

ஒருமுறை கயிலாய மலையில் ஆழமான தியானத்தில் இருந்த சிவபெருமான், பகவான் கிருஷ்ணர் தனது திவ்யமான குழலிலிருந்து எழுப்பிய மதுரமான அதிர்வைக் கேட்டார். அந்த நாதத்தில் மயங்கிய அவர் சமாதி நிலையை எய்தினார். அந்தத் தெய்வீக ஒலியைப் பின்தொடர்ந்து அவர் விருந்தாவனம் வந்தடைந்தார். அங்கே கோபிநாதனாகிய கிருஷ்ணர் தனது கோபிகளுடன் மகா ராசலீலையைத் தொடங்கத் தயாராகிக் கொண்டிருந்தார்.

கோபி ரூபம் பெறுதல்

மகா ராசலீலையில் பங்கேற்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் ராச மண்டபத்தின் நுழைவாயிலுக்கு வந்த சிவபெருமானை, யோகமாயை தடுத்து நிறுத்தினார். "கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த ஆடவனுக்கும் இங்கு அனுமதியில்லை. நீங்கள் விருந்தாவனத்தில் வசிக்கும் ஒரு கோப கன்னியை போல (ஒரு கோபியின்) வடிவத்தைப் பெற்றால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்," என்று கூறினார்.

"நான் எவ்வாறு கோபி ரூபத்தைப் பெறுவது?" என்று போலேநாத் கேட்க, "விருந்தா தேவியைச் சரணடையுங்கள், அவரே உங்களுக்கு அந்த வடிவத்தை அருளுவார்," என்று யோகமாயை பதிலளித்தார். விருந்தா தேவியின் அறிவுரைப்படி, சிவபெருமான் மானசரோவர் தீர்த்தத்தில் நீராடினார். அந்தப் புனிதத் தடாகத்திலிருந்து வெளியே வந்தபோது, சிவபெருமான் அதீத அழகு வாய்ந்த ஒரு கோபியாக உருமாறியிருந்தார்.

ராச மண்டபத்தில் மகாதேவன்

விருந்தா தேவி, கோபி வடிவிலிருந்த சிவபெருமானை ராச மண்டபத்தின் ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே நின்றபடி சிவபெருமான், தமக்கு 'பிரேம பக்தி' வழங்க வேண்டி ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணரைத் துதித்தார்.

ராசலீலை தொடங்கியது. பகவான் கிருஷ்ணர் அனைத்து கோபிகளுடனும் நடனமாடினார். கோபி வேடத்தில் இருந்த சிவபெருமானுடனும் அவர் மிக நளினமாக நடனமாடினார். சிறிது நேரம் கழித்து ஓய்வெடுக்கும்போது பகவான் கூறினார்: "வழக்கம் போல இந்த ராசலீலையில் எனக்கு முழுமையான இன்பம் கிடைக்கவில்லை. ஏதோ ஒன்று சரியாக இல்லை. நம்மிடையே வேறொரு ஆண் இருப்பதாக நான் கருதுகிறேன்."

யாராவது ஆண்மகன் கோபி வேடத்தில் ஒளிந்திருக்கிறாரா என்று சோதிக்கும்படி லலிதா தேவியிடம் கிருஷ்ணர் கேட்டுக்கொண்டார். லலிதா தேவி அங்கிருந்த நூற்றுக்கணக்கான கோபிகளின் முகத்திரையை விலக்கிச் சோதித்தார். இறுதியில் குழப்பத்துடன் கிருஷ்ணரிடம் வந்து, "ஆண்கள் எவரையும் நான் காணவில்லை, ஆனால் மூன்று கண்களைக் கொண்ட ஒரு கோபி மட்டும் இங்கே இருக்கிறார்," என்று கூறினார்.

கோபேஷ்வர் என்ற திருநாமம்

சிவ-கோபியைக் கண்ட பகவான் கிருஷ்ணர் மனதாரச் சிரித்தார். "ஹே கோபேஷ்வர்! உங்களை இந்த கோபி வடிவத்தில் காண்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இந்த ராசலீலை இல்லறத்தாருக்கானது (கிருஹஸ்தர்கள்) அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். உமது விருப்பம் நிறைவேறிய நிலையில், இனி நீர் இந்த ராச மண்டபத்தின் நுழைவாயில் காவலராக (ராச துவார பாலகர்) பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் அனைத்து கோபிகளும் உமக்கு மரியாதை செலுத்தி, 'கோபி பாவத்தைப்' பெற உம்முடைய ஆசியை நாடுவார்கள்," என்று கிருஷ்ணர் வரமளித்தார்.



அன்று முதல் இன்று வரை, விருந்தாவனத்தில் கோபேஷ்வர் மகாதேவர் காலை வேளைகளில் சிவலிங்கத் திருமேனியாகப் பூஜிக்கப்படுகிறார். மாலை வேளைகளில், அந்தச் சிவலிங்கம் ஒரு அழகான கோபியைப் போல ஆபரணங்களாலும் உடைகளாலும் அதீத எழிலுடன் அலங்கரிக்கப்படுகிறது.



"பிருந்தாவன வனிபதே! ஜெய ஸோம ஸோம மெளலே 

சனக்க சனந்தன சனாதன நாரதேத்ய

கோபீஸ்வரா! பிரஜ விலாஸி யுஹாங்க்ரி பத்மே

பிரேம பிரயச்ச நிருபாதி நமோ நமஸ் தே"


(சங்கல்ப கல்பத்ருமா -103)


"ஓ, பிருந்தாவனத்தின் வாசலில் நின்று காப்பவரே! ஓ ஸோமா, உமக்கு வந்தனம்! சந்திரனைத் தலையில் சூடி, சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் நாரதர் போன்ற மகா பெரும் முனிவர்கள் முதற் கொண்டு அனைத்து முனிவர்களும் வழிபடும் கோபீஸ்வரா! உமக்கு நான் என் பணிவான வந்தனங்களைச் செலுத்திகிறேன். பிரஜ மண்டலத்தில் அற்புத லீலைகளை நடத்தும் ஸ்ரீ ராதா மாதவரின் பாதக் கமலங்களின் மேல் எனக்குப் பிரேம பக்தி உண்டாக தயைக் கூர்ந்து அருள் புரிவீராக! உமக்கு நான் திரும்பத் திரும்ப வந்தனம் செய்கிறேன்"


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்



Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more