Skip to main content

ஊஞ்சல் திருவிழா : ஶ்ரீ ஜூலன் யாத்திரை

 


ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணரின் திவ்யமான ஊஞ்சல் லீலை: ஶ்ரீ ஜூலன் யாத்திரை

ஶ்ரீ ஜூலன் யாத்திரை (ஊஞ்சல் சேவை) என்பது உலகம் முழுவதிலும் உள்ள வைஷ்ணவர்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு மங்களகரமான திருவிழாவாகும். இந்த புனிதமான விழா, ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் திவ்யமான ஊஞ்சல் லீலையைக் கொண்டாடுகின்றது. அவர்களின் நித்தியமான பிரேம லீலைகளைப் பிரதிபலிக்கும் இந்த ஜூலன் உத்ஸவம்; கீர்த்தனம், ஊஞ்சல் சேவை மற்றும் ஸ்ருங்கார சேவை (அலங்காரச் சேவை) ஆகியவற்றின் மூலமாகத் தங்களது பக்தித் தொண்டைச் சமர்ப்பிக்க பக்தர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.

ஜூலன் யாத்திரை: காலம் மற்றும் நாட்கள்

ஜூலன் யாத்திரை, பவித்ரோபனா ஏகாதசியில் தொடங்கி, பலராம பூர்ணிமா அல்லது ஶ்ராவண பூர்ணிமா நாளில் நிறைவடைந்து, 5 நாட்கள் வரை நடைபெறுகிறது. எனினும், ஶ்ரீ பிருந்தாவன தாமத்தில் பாரம்பரியமாக ஜூலன் யாத்திரை 13 நாட்கள் வரை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஜூலன் யாத்திரை: பொருள், தோற்றம் மற்றும் பின்னணி லீலை

  • பொருள்: 'ஜூலன்' என்னும் சொல் ஊஞ்சலையும், 'யாத்திரை' என்பது ஊர்வலம் அல்லது திருவிழாவையும் குறிக்கிறது. எனவே, ஜூலன் யாத்திரை என்றால் நேரடியாக 'ஊஞ்சல் திருவிழா' என்று பொருளாகிறது. பக்தர்கள் மரத்தினால் செய்யப்பட்ட அழகிய ஊஞ்சலை அமைத்து, அதனைப் பலவகை மலர்களாலும் இலைகளாலும் அலங்கரித்து, திவ்ய தம்பதிகளான ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணரை அதில் அன்போடு எழுந்தருளச் செய்து, ஊஞ்சல் சேவையின் மூலம் தங்களது பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
  • தோற்றம்: ஜூலன் யாத்திரையின் பாரம்பரியமானது விரஜ பூமியில் ஶ்ரீமதி ராதாராணியும் ஶ்ரீ கிருஷ்ணரும் புரிந்த திவ்யமான ஊஞ்சல் லீலையிலிருந்தே தோன்றியது. பிரம்ம வைவர்த்த புராணம் மற்றும் ஹரி-பக்தி-விலாஸ போன்ற வைஷ்ணவ சாஸ்திரங்களில் அவர்களின் திவ்ய லீலைகள் மற்றும் ஆராதனை முறைகள் பற்றிய விரிவான வர்ணனைகள் காணப்படுகின்றன.
  • பின்னணி லீலை: பாரம்பரிய கலாச்சாரத்தில், திருமணமான பெண்கள் ஶ்ராவண மாதத்தில் (ஆடி-ஆவணி) தங்களது பிறந்த வீட்டிற்குச் செல்வது வழக்கமாகும். இந்த வழக்கத்தின்படி, ஶ்ரீமதி ராதாராணி யாவட்டிலுள்ள தனது மாமியார் வீட்டிலிருந்து பர்ஸானாவிலுள்ள தன் தந்தையின் வீட்டிற்கு எழுந்தருளினார். ஶ்ரீ கிருஷ்ணரின் அம்சமாகவே கருதப்படும் விலாஸ கர்ஹ் மலையின் உச்சியில், ஶ்ரீமதி ராதாராணியை மகிழ்விப்பதற்காக அவரது தோழிகள் ஶ்ரீ ராதையை மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர வைத்தனர்.

அபோது, திடீரென்று தனது முகத்தைச் சேலையால் மூடியபடி அறியப்படாத ஒரு சியாமள நிற கோபி அங்கு வந்தாள். தோழிகள் அந்த புதிய கோபியையும் ராதாராணியுடன் ஊஞ்சலில் அமருமாறு அழைத்தனர். ஊஞ்சலை ஆட்டத் தொடங்கிய கணத்தில், அந்த மாயக் கோபி பேரானந்தத்தில் மூர்ச்சையடைந்து விழுந்தாள். தோழிகள் அவளுக்கு உதவ முற்பட்டபோது, அவளிடம் ஶ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழல் இருப்பதைக் கண்டு, ராதாராணியுடன் இணைந்திருக்கவே கிருஷ்ணர் இவ்வாறான வேடத்தில் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அதிசயித்தனர்.

தன் கண் முன்னே ஶ்ரீ கிருஷ்ணரைக் கண்டதும் ஶ்ரீ ராதையின் பிரிவுத் துயர் மறைந்து, திவ்ய தம்பதியர் மீண்டும் இணைந்தனர். பின்னர் தோழிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊஞ்சல் லீலையைத் தொடர, அவ்விடம் முழுதும் ஆன்மீக ஆனந்தத்தால் நிறைந்தது. ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணரின் இந்த மதுரமான லீலையே ஜூலன் யாத்திரையாக அன்போடு நினைவுகூரப்படுகிறது.

ஜூலன் யாத்திரை, பருவமழை மற்றும் விரஜ தாமத்துடனான தொடர்பு

புனிதமான ஶ்ராவண மாதத்தில், வானத்தில் திரளும் கார்மேகங்கள் ஶ்ரீ கிருஷ்ணரின் மேனி அழகை ஒத்திருக்கின்றன. பருவமழையின் போது, விரஜ பூமியின் 12 வனங்களும் பசுமையாகவும், குளிர்ந்த தென்றல் காற்றினாலும் நிரம்புகின்றன. இந்த எழில்மிகு சூழல், ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணர் தங்களது அந்தரங்க லீலைகளைக் கொண்டாடிய விரஜின் மனோகரமான வளிமண்டலத்தை நினைவூட்டுகிறது.

ஶ்ரீ ராதா-கிருஷ்ணரின் ஊஞ்சல் லீலையானது விரஜ தாமத்துடன் ஆழமான தொடர்புடையது. அங்குள்ள கோபியர்கள் திவ்ய தம்பதிகளின் மகிழ்ச்சிக்காகப் பிரம்மாண்டமான புளியமரத்தில் (இம்லிதலா) ஊஞ்சலைக் கட்டி ஆட்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, ஜூலன் யாத்திரை என்பது ஶ்ரீ ராதா-கிருஷ்ணரின் ஊஞ்சல் லீலையை நினைவுகூர்ந்து பக்தர்கள் திவ்ய தம்பதியருக்கு ஆனந்தமாகச் சேவை செய்யும் விரஜ தாமத்துடன் விசேஷமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

ஜூலன் சேவையின் பக்திப் பொருள்

ஜூலன் சேவை என்பது ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணருக்குச் செய்யப்படும் பக்தித் தொண்டின் மிக அழகிய வடிவமாகும். அகில உலகிற்கும் அதிபதியும் காப்பாளனுமாக விளங்கும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு அன்பான பக்தித் தொண்டைச் செய்ய வேண்டும் என்பதை இத்திருவிழா நமக்கு உணர்த்துகிறது. ஊஞ்சலை அலங்கரிப்பது, ஜூலன் சேவைக்கு உதவுவது, அல்லது ஶ்ரீ ராதா-கிருஷ்ணர் எழுந்தருளியிருக்கும் ஊஞ்சலை மென்மையாக ஆட்டுவது எனச் சிறிய சேவையாக இருந்தாலும், அது இறைவனைத் திருப்திப்படுத்த பக்தர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

ஜூலன் யாத்திரையின் முக்கியத்துவம்

ஜூலன் யாத்திரை என்பது அன்பான பக்தித் தொண்டின் மூலம் ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணரைத் திருப்திப்படுத்துவதை மையமாகக் கொண்ட ஒரு திருவிழாவாகும். விரஜ கோபியர்கள் திவ்ய தம்பதியர் மகிழ்ச்சியடைவதைக் காண்பதற்காகவே ஊஞ்சலை அலங்கரிப்பதிலும், பாடல்கள் பாடிச் சேவை செய்வதிலும் எப்போதும் பேரார்வம் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த பாவம், உண்மையான பக்தி என்பது நமது சொந்த சுகத்தை எதிர்பார்ப்பதில் இல்லை, மாறாக ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணரின் ஆனந்தத்தையே நோக்கமாகக் கொண்டது என்பதை நமக்குக் கற்பிக்கிறது.

தோழிகளின் இந்தச் சேவை பாவத்தைப் பின்பற்றி, நாமும் நமது மிகச்சிறிய செயல்களையும் பகவானின் திருப்திக்காகச் சமர்ப்பிக்க முடியும். ஜூலன் சேவை, ஹரி நாம கீர்த்தனம் அல்லது உண்மையான ஸ்மரணம் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு சேவையும் நமது பக்தியை ஆழப்படுத்தி, நித்தியமான ஆன்மீக ஆனந்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஜூலன் யாத்திரை கீர்த்தனங்கள்

ஶ்ரீமதி ராதாராணி மற்றும் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரேமை நிறைந்த ஊஞ்சல் லீலையை தர்சனம் செய்யும் வகையில் ஶ்ரீல ஜகன்னாத தாஸ பாபாஜி மஹாராஜாவால் இயற்றப்பட்ட புகழ்பெற்ற ஜூலன் யாத்திரை பாடல் இதோ:

(1)

தேகோ ஸகி ஜூலத யுகல கிஷோர

நீலமணி ஜடவோல காஞ்சன ஜோர

லலிதா விசாகா ஸகி ஜூலயத ஸுகே

ஆனந்தே மகன ஹேரி தொன்ஹே தொன்ஹ முகே

பொருள்: தோழியே, இதோ பார் ! தங்கத்தில் பதிக்கப்பட்ட நீலமணி போல திவ்ய தம்பதிகளான யுகல கிஷோரர்கள் ஊஞ்சலில் ஆடுகிறார்கள்! லலிதையும் விசாகையும் பேரானந்தத்துடன் ஊஞ்சலை ஆட்ட, திவ்ய தம்பதியர் ஒருவரையொருவர் நோக்கி ஆனந்தத்தில் திளைக்கின்றனர்!

(2)

கரஜத ககனே ஸகனே கன கோர

ரங்கினி ஸங்கினி கேரத செளத்தர

விவித குஸுமே ஸபே ரசிய ஹிந்தோல

தோலய யுகல ஸகி ஆனந்தே விபோல

பொருள்: வானில் கார்மேகங்கள் இடிமுழக்கம் செய்ய, ரங்கினி (லீலைகளில் திளைக்கும் ஶ்ரீ ராதிகா) தனது தோழிகள் சூழ ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறாள். பலவகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஊஞ்சலைத் தோழிகள் ஆன்மீகப் பரவசத்துடன் ஆட்டுகின்றனர்.

(3)

ஜூலவோத ஸகிகன கரதாலி திய

ஸுவதனி கோஹே பாசே கிராயே பந்துயா

விகலித துகூல் உதித ஸ்வேத பிந்து

அமிய ஜரயே யெனோ துஹுன் முக இந்து

பொருள்: தோழிகள் தங்களது கரங்களால் வேகமாய் ஊஞ்சலைத் தள்ளுகின்றனர். சுவதனி (அழகிய முகமுடைய ராதை), "என் அன்பே, நாம் பின்னால் விழுந்துவிடுவோம்!" என்று கிருஷ்ணரிடம் கூறுகிறாள். அவர்களின் ஆடைகள் நெகிழ்கின்றன; சந்திரனைப் போன்ற அவர்களின் திருமுகங்களில் தோன்றும் வேர்வைத்துளிகள் அமுதப் பிந்துக்களைப் போல் பொழிகின்றன.

(4)

ஹேரி ஸப் ஸகிகன தொன்ஹகார ஶ்ரம

சாமர வீஜன லெய் கொரயே ஸேவன

ப்ரமர கோகில ஸப் போஸி தரு டாலே

ரதி ஜய ராதா-க்ருஷ்ண ராதா-க்ருஷ்ண போலே

கோஹே ஜகன்னாத கொபே ஹோபே ஶுப தினே

ஸகி ஸஹே தொன்ஹகாரே ஹேரிபோ விபினே

பொருள்: திவ்ய தம்பதியரின் களைப்பைக் கண்ட தோழிகள் அனைவரும் சாமரம் வீசிச் சேவை செய்யத் தொடங்குகின்றனர். மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் வண்டுகளும் குயில்களும் மிகுந்த பிரேமையுடன் "ஜய ராதா-கிருஷ்ண! ஜய ராதா-க்ருஷ்ண!" என்று பாடுகின்றன. ஜகன்னாத தாஸர், "அந்தப் புனிதமான நாள் எனக்கு எப்போது கிடைக்கும்? இந்தத் தோழிகளுடன் கானகத்தில் திவ்ய தம்பதியரை நான் என்று காண்பேன்?" என்று ஏங்குகிறார்.

இந்த அற்புதப் பாடலைத் தவிர, விபாவரீ சேஷ, ஜய ஜய ராதா-கிருஷ்ண, ராதே ஜய ஜய மாதவ தயிதே, ராதா கிருஷ்ண பிராண மோர மற்றும் பிருந்தாவன ரம்ய ஸ்தான் போன்ற பக்திப் பாடல்களும் ஜூலன் யாத்திரையின் போது பக்தர்களால் பாடிப் பரவசிக்கப்படுகின்றன.

முடிவுரை

எனவே, ஜூலன் யாத்திரை என்பது ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணரின் மதுரமான லீலைகளை நினைவுகூர்வதற்கும், விரஜ பக்தர்களின் பிரேமை நிறைந்த சேவை பாவத்தைப் பின்பற்றுவதற்கும் கிடைத்த ஒரு பாக்கியமாகும். ஜூலன் சேவை, ஹரிநாம கீர்த்தனம் மற்றும் ஆன்மீகச் சமர்ப்பணங்களில் பங்கேற்பதன் மூலம் நாம் அவர்களின் நித்தியமான பக்தித் தொண்டில் நம்மை ஈடுபடுத்தி அவர்களின் கருணையைப் பெறப் பிரார்த்திப்போம். இந்த ஜூலன் யாத்திரை நம்மை எப்போதும் ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணரின் திருப்திக்காகச் செயல்பட வைத்து, அவர்களின் பக்தித் தொண்டில் நிலைத்திருக்க அருள்வதாக.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

 

Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more