மொழிபெயர்ப்பு
ஒரு தூய பக்தர்—ஸாலோக்யம், ஸார்ஷ்டி ஸாமீப்யம், ஸாரூப்யம் அல்லது ஏகத்வம் ஆகிய இப்பதவிகள் பரம புருஷ பகவானாலேயே கொடுக்கப்பட்டாலும் கூட, இத்தகைய எந்தவித விடுதலையையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
தானாகத் தோன்றிய அன்பினால் பரம புருஷ பகவானுக்குப் புரியும் தூய பக்தித் தொண்டை எப்படி நிறைவேற்றுவது என்று பகவான் சைதன்யர் நமக்குக் கற்றுத் தருகிறார். சிக்ஷாஷ்டகத்தில், அவர் பகவானிடம் வேண்டுகிறார்: “ஓ பகவானே, நான் உங்களிடமிருந்து எந்தச் செல்வத்தையும் பெறவோ, ஒரு அழகிய மனைவியைப் பெறவோ, என்னைப் பின்பற்றும் பலரையோ பெற விரும்பவில்லை, உங்களிடம் இருந்து நான் பெற விரும்புவது என்னவென்றால் ஒவ்வொரு பிறப்பிலும் நான் உங்கள் பாத கமலங்களுக்குத் தொண்டு செய்யும் தூய பக்தனாக இருக்க வேண்டும்” என்பதாகும். பகவான் சைதன்யரின் வேண்டுதல்களுக்கும் ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றுக்களுக்குமிடையில் ஒற்றுமை உள்ளது. பகவான் சைதன்யர் “ஒவ்வொரு பிறப்பிலும்” என்று வேண்டுகிறார், இது ஒரு பக்தர் பிறப்பு இறப்புகளின் ஒழிவைக் கூட விரும்பவில்லை என்பதைக் குறிக்கிறது. யோகிகளும் உலகியல் பாற்பட்ட தத்துவவாதிகளும் பிறப்பு இறப்பு அற்ற வாழ்வினை விரும்புகின்றனர். ஆனால் ஒரு பக்தர் இந்த உலகத்தில் இருந்து கொண்டு பக்தித் தொண்டை நிறைவேற்றுவதில் திருப்தியடைகிறார்.
ஏகத்வம் எனும் பகவானுடன் ஒன்றிவிடும் தன்மையை மாயாவாதிகள் மனக் கற்பனையாளர்கள், தியானிப்பவர்கள் விரும்புதல் போன்று ஒரு தூய பக்தர் விரும்புவதில்லை என்பது இங்கு தெளிவாகக் குறிக்கப்படுகிறது. பகவானுடன் ஒன்றுதல் என்பது தூய பக்தரின் கனவுக்கு அப்பாற்பட்டதாகும். சிலசமயம் அவர் பகவானுக்குத் தொண்டு புரிவதற்காக, வைகுந்தத்தில் உயர் பதவி பெறுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர் நரகத்தை விட மோசமானதாகக் கருதும் பிரம்ம ஒளியில் கலப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த ஏகத்வம் அல்லது பகவானின் ஒளியில் கலத்தல் என்பது கைவல்யம் எனப்படும். ஆனால் கைவல்யத்திலிருந்து பெறப்படும் மகிழ்ச்சியானது தூய பக்தரால் நரகமாகக் கருதப்படுகிறது. பக்தர் பகவானுக்குத் தொண்டு புரிவதில் அதிக ஆர்வம் கொண்டதால், விடுதலையின் ஐந்து வகைகள் அவருக்கு முக்கியமல்ல. ஒருவர் பகவானுக்குத் தூய உன்னத அன்புத் தொண்டு புரிவதில் ஈடுபட்டால், அவர் ஏற்கெனவே விடுதலையின் ஐந்து வகைகளை அடைந்துவிட்டார் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது.
ஒரு பக்தர் ஆன்மீக உலகான வைகுந்தத்திற்கு உயர்த்தப்படும் பொழுது, அவர் நான்குவித வசதிகளைப் பெறுகிறார். அதில் ஒன்று ஸாலோக்யம், பரம புருஷ பகவான் போல அதே கோளில் வசித்தல், பரமன், அவருடைய வேறுபட்ட முழு விரிவுகளில், எண்ணிலடங்கா வைகுந்தக் கோள்களில் வசிக்கிறார். இவற்றின் தலைமைக் கோள் கிருஷ்ண லோகமாகும். இந்த அண்டத்திற்குள் தலைமைக் கோளாக சூரியன் இருப்பதுபோல, ஆன்மீக உலகில் தலைமைக் கோள் கிருஷ்ண லோகமாகும். கிருஷ்ண லோகத்திலிருந்து கிருஷ்ண பகவானின் திவ்ய மங்கள உடல் ஒளி ஆன்மீக உலகிற்கு மட்டும் அல்லாமல் பிறவுலகிற்கும் வழங்கப்படுகிறது. ஆயினும், இந்தவுலகில் அது பொருளால் மூடப்பட்டுள்ளது. ஆன்மீக உலகில் எண்ணிலடங்கா வைகுந்தக் கோள்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பகவானே முதன்மையான தெய்வம் ஆவார். பக்தர் பரம புருஷ பகவானுடன் வசிக்க அம்மாதிரி ஒரு வைகுந்தக் கோளுக்கு உயர்த்தப்பட முடியும்.
ஸார்ஷ்டி விடுதலையில் பக்தரின் ஐஸ்வர்யமும் பகவானின் ஐஸ்வர்யமும் சமமாகும். ஸாமீப்யம் என்றால் பகவானுக்கு நெருங்கிய தோழராக இருத்தல் என்று பொருள். ஸாரூப்ய விடுதலையில் பக்தரின் உடல் தோற்றங்கள் பகவானின் தெய்வீக உடலில் சிறப்பாகக் காணப்படும் இரண்டு அல்லது மூன்று அடையாளங்களைத் தவிர மற்றவை பகவானுடையதுபோலவே தோன்றுகின்றன. சான்றாக, ஸ்ரீ வத்ஸம் எனும் பகவானின் மார்பில் உள்ள சுருள் மயிர் குறிப்பாக அவரை அவரது பக்தர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
ஒரு தூய பக்தர் ஐந்துவித ஆன்மீக வாழ்வை அவை வழங்கப்பட்ட போதிலும் ஒப்புக்கொள்வதில்லை. அவர் நிச்சயமாக ஆன்மீக பயன்களுடன் ஒப்பிடும் பொழுது, முக்கியமற்ற உலகியல் பயன்களுக்கு விருப்பப்படுவதில்லை. பிரஹ்லாத மஹாராஜாவுக்குச் சில ஜடப் பலன்கள் அளிக்கப்பட்ட பொழுது, அவர் குறிப்பிட்டார். “என் பகவானே, நான் என் தந்தையார் எல்லாவித பலன்களையும் அடைந்ததைப் பார்த்திருக்கிறேன். தேவர்களும் அவரது அளப்பரிய செல்வத்தை பார்த்து அச்சப்பட்டனர். ஆயினும், ஒரு நொடியில் அவர் வாழ்வையும், அவரின் எல்லா உடைமைகளையும் முடித்து விட்டீர்கள்.” ஒரு பக்தருக்கு ஜடவுலக அல்லது ஆன்மீகச் செல்வத்தை விரும்புவது பற்றிய வினாவே எழாது. அவர் பகவானுக்குத் தொண்டு செய்யவே விரும்புகிறார். அதுவே அவரின் மிகவுயர்ந்த மகிழ்ச்சியாகும்.
Comments
Post a Comment