தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும் வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் இன்றைய உலகில், யாரேனும் ஒருவரிடம் இடுப்பில் காவி, கழுத்தில் மாலை, நெற்றியில் குறி முதலிய ஆன்மீக சின்னம் இருந்தால் போதும், அந்த நபர் கபடதாரியாக இருந்தாலும், அவரை ஆன்மீக குருவாக ஏற்பதற்கு சமுதாயம் தயாராக உள்ளது. மறுபுறம், ஆன்மீக குருமார்களும் எவ்விதப் பயிற்சியோ பரிட்சையோ இல்லாமல் சீடர்களை ஏற்கின்றனர். இதுதான் இன்றைய நிதர்சனம். ஆனால் வேத இலக்கியங்களோ குரு-சீட இலக்கணங்களை வகுத்து நமக்கு வழிகாட்டியுள்ளது. ஆயோத தௌம்யர் என்னும் தலைசிறந்த குரு தமது சீடர்களை எவ்வாறு பரிசோதித்தார் என்பதை மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் (அத்தியாயம் 3) காண்கிறோம். மடையாய் கிடந்த சீடன் ஆயோத தௌம்யரின் ஆஷ்ரமம் அடர்ந்த அடவியில் அழகாக அமைந்திருந்தது; அங்கே அவருக்கு ஆருணி, உபமன்யு, வேதன் முதலிய முத்தான சீடர்கள் சேவை செய்து வந்தனர். ஒரு நாள் மாமுனிவர் தௌம்யர் ஆருணியை அழைத்து, வயலின் வாய்க்கால் உடைப்பை அடைத்துவிட்டு வரும்படி ஆணையிட்டார். ஆருணி வாடையின் வாட்டலுக்கு வருந்தாது வரப்பு வழியே விரைந்தபோது, வழக்கத்திற்கு மாறாக வாய்க்காலில் வழிந்தோடும் நீர்ப்பெ...