மனுஷ்ய ரூபத்தில் வைகுண்டநாதர்

 


யன் மர்த்ய-லீலௌபயிகம் ஸ்வ-யோக- 

மாயா-பலம் தர்சயதா க்ருஹீதம் 

விஸ்மாபனம் ஸ்வஸ்ய ச ஸௌபகர்த்தே: 

பரம் பதம் பூஷண-பூஷணாங்கம்




மொழிபெயர்ப்பு

பகவான் தமது அந்தரங்கச் சக்தியான யோகமாயையினால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவர் தமது லீலைகளுக்குப் பொருத்தமான நித்திய ரூபத்துடன் வருகிறார். வைகுண்ட நாதராகத் தமது நித்திய ரூபத்திலுள்ள பகவான் உட்பட, தங்களுடைய சொந்த ஐசுவரியத்தில் செருக்குடையவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த லீலைகள் அற்புதமானவையாக இருந்தன. இவ்வாறாக, அவரது (ஸ்ரீ கிருஷ்ணரின்) உன்னதமான உடல் அணிகலன்களுக்கெல்லாம் அணிகலனாக விளங்குகிறது.


பொருளுரை

வேத மந்திரங்களில் (நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம்) உறுதி செய்யப்பட்டுள்ளதுபோல், எல்லா பிரபஞ்சங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட பரமபுருஷர் தலைசிறந்தவராவார். அவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைமையானவர்; செல்வம், பலம், புகழ், அழகு, அறிவு மற்றும் துறவு ஆகிய ஐசுவரியங்களில் அவருக்கு இணையானவர்களோ அல்லது அவரை விட உயர்ந்தவர்களோ ஒருவரும் இல்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பிரபஞ்சத்தில் அவதரித்திருந்த பொழுது, ஜடவுலக லீலைகளுக்குச் சற்றே பொருத்தமான முறையில் அவர் தோன்றியிருந்ததால், அவர் ஒரு மனிதனைப் போலவே காணப்பட்டார். அவர் தமது நான்கு கரங்களைக் கொண்ட வைகுண்ட அம்சத்துடன் மனித சமூகத்தில் தோன்றவில்லை. ஏனெனில் அது அவருடைய லீலைகளுக்குப் பொருத்தமாக இருந்திருக்காது.

ஆனால் ஒரு மனிதராக அவர் தோன்றியிருந்த போதிலும், அவரது ஆறு ஐசுவரியங்களில் அவருக்கு இணையானவர்களாக யாருமே இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை. ஒவ்வொருவரும் இவ்வுலகில் தாங்கள் பெற்றுள்ள ஐசுவரியத்தினால் செருக்குடையவர்களாக உள்ளனர். ஆனால் மனித சமூகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்திருந்த பொழுது, பிரபஞ்சத்தில் உள்ள அனைவரையும் அவர் மிஞ்சியவராக இருந்தார்.

பகவானின் லீலைகள் மனிதக் கண்களுக்குப் புலப்படும் பொழுது அவை 'ப்ரகடம்' என்றும், புலப்படாத பொழுது 'அப்ரகடம்' என்றும் அழைக்கப்படுகின்றன. உண்மையில் சூரியன் எப்படி ஆகாயத்தை விட்டுச் செல்வதில்லையோ, அதுபோலவே பகவானின் லீலைகளும் முடிவடைவதே இல்லை. ஆகாயத்தில் சூரியன் எப்பொழுதும் அதன் சரியான சுற்றுப் பாதையிலேயே சுழல்கிறது. ஆனால் குறையுடைய நமது பார்வைக்கு அது சில சமயங்களில் காணப்படுவதாகவும், சில சமயங்களில் காணப்படாததாகவும் இருக்கிறது. அதைப்போலவே பகவானின் லீலைகள் ஒரு பிரபஞ்சத்திலோ அல்லது மற்றொன்றிலோ எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

துவாரகையிலிருந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மறைந்த பொழுது, அங்குள்ள மக்களின் கண்களிலிருந்து அவர் மறைந்து போனார் என்பதை மட்டுமே இது குறிக்கிறது. ஜடவுலக லீலைகளுக்குச் சற்றே பொருத்தமான அவரது உன்னத உடல், வைகுண்ட லோகங்களிலுள்ள அவரது வெவ்வேறு விரிவாக்கங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. வைகுண்ட லோகங்களில் பகவானால் வெளிப்படுத்தப்படும் கருணையை விட, ஜடவுலகில் லீலைகள் புரிவதற்காக அவர் ஏற்ற திவ்யமான உடல் தலைசிறந்ததாகும். வைகுண்ட லோகங்களில் முக்தி பெற்ற (நித்ய-முக்த) ஜீவராசிகளிடம் பகவான் கருணை காட்டுகிறார். ஆனால் பௌதிக உலகில் அவர் நிகழ்த்திய லீலைகளில் இழிவடைந்த அல்லது என்றென்றும் பந்தப்பட்ட (நித்ய-பத்த) ஆத்மாக்களிடம்கூட அவர் கருணை கொள்கின்றார்.

அவரது அந்தரங்க சக்தியின் (யோக-மாயா) மூலமாக ஜடவுலகில் அவர் வெளிப்படுத்திய தலைசிறந்த ஆறு ஐசுவரியங்கள் வைகுண்ட லோகங்களிலும் காணப்படுவது அரிது. அவரது லீலைகள் அனைத்தும் அவரது ஆன்மீக சக்தியினால் தோற்றுவிக்கப்பட்டவையாகும், பௌதிக சக்தியினால் அல்ல. பிருந்தாவனத்தில் அவர் நிகழ்த்திய ராஸ லீலையும், 16,108 மனைவிகளுடன் ஒரு குடும்பஸ்தராக அவர் வாழ்ந்ததும் வைகுண்டத்திலுள்ள நாராயணனுக்கும்கூட அற்புதமானதாகத் தோன்றுகிறது. ஜடவுலகிலுள்ள ஜீவராசிகளுக்கும் அது அதியற்புதமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீ ராமர், நரசிம்மர் மற்றும் வராகர் முதலான பகவானின் மற்ற அவதாரங்களுக்கும் கூட அவரது லீலைகள் அற்புதமானவையாக இருந்தன. அவரது ஐசுவரியம் மிகவும் தலைசிறந்ததாக இருந்ததால், அவரது லீலைகள், ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதான வைகுண்ட நாதராலும் மதித்துப் போற்றப்பட்டன.


( ஶ்ரீமத் பாகவதம் 3.2.12  )

 



முக்கிய கருத்துக்கள்


1. பகவானின் தோற்றம் மற்றும் நித்திய வடிவம்

  • பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது யோகமாயை என்னும் அந்தரங்கச் சக்தியின் மூலமாகவே இவ்வுலகில் தோன்றுகிறார்.

  • அவர் ஒரு சாதாரண மனிதனைப் போலத் தோன்றினாலும், அவரது உடல் ஜடப் பொருட்களால் ஆனது அல்ல; அது உன்னதமானது மற்றும் அனைத்து அணிகலன்களுக்கும் அழகூட்டக்கூடிய மிகச்சிறந்த வடிவமாகும்.

2. லீலைகளுக்கேற்ற ரூபம்

  • வைகுண்டத்தில் நான்கு கரங்களுடன் நாராயணனாக இருக்கும் பகவான், பூமியில் தனது லீலைகளுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இரண்டு கரங்களுடன் மனித வடிவில் தோன்றினார்.

  • இந்த வடிவம் வைகுண்ட நாதராலும், மற்ற அவதாரங்களாலும் (ராமர், நரசிம்மர் போன்றவை) வியந்து போற்றப்படும் அளவிற்கு மிக உயர்ந்தது.

3. ஈடுஇணையற்ற ஆறு ஐசுவரியங்கள்

  • பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் செல்வம், பலம், புகழ், அழகு, அறிவு மற்றும் துறவு ஆகிய ஆறு ஐசுவரியங்களிலும் முழுமையானவர்.

  • இந்த ஐசுவரியங்களில் அவருக்கு இணையானவர்களோ அல்லது அவரை விட உயர்ந்தவர்களோ எக்காலத்திலும் எவ்வுலகிலும் இல்லை.

4. லீலைகளின் நித்தியத்தன்மை (சூரியன் உதாரணம்)

  • பகவானின் லீலைகள் முடிவற்றவை. அவை நம் கண்களுக்குத் தெரிவதை 'ப்ரகடம்' என்றும், தெரியாமல் இருப்பதை 'அப்ரகடம்' என்றும் அழைக்கிறோம்.

  • வானில் சூரியன் எப்போதும் இருப்பது போல, பகவானின் லீலைகள் ஏதோ ஒரு பிரபஞ்சத்தில் எப்போதும் நடந்து கொண்டே தான் இருக்கும். நாம் பார்க்க முடியாத போது சூரியன் இல்லை என்று சொல்வது எப்படித் தவறோ, அதுபோல பகவான் மறைந்துவிட்டார் என்று கருதுவதும் தவறானது.

5. பந்தப்பட்ட ஆத்மாக்களின் மீது கருணை

  • வைகுண்டத்தில் முக்தி பெற்ற ஆன்மாக்களிடம் பகவான் கருணை காட்டுகிறார். ஆனால், பூலோக லீலைகளின் போது, அவர் பாவிகளுக்கும் பந்தப்பட்ட (நித்ய-பத்த) ஆத்மாக்களுக்கும் கூட தனது எல்லையற்ற கருணையை வழங்குகிறார்.

6. அதியற்புதமான லீலைகள்

  • பிருந்தாவனத்தில் நிகழ்த்திய ராஸ லீலை மற்றும் துவாரகையில் 16,108 மனைவிகளுடன் வாழ்ந்த குடும்ப வாழ்க்கை போன்றவை வைகுண்ட லோகங்களில் கூட காண முடியாத மிக அரிதான மற்றும் அற்புதமான லீலைகளாகும்.


சுருக்கமாக: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது தெய்வீக சக்தியால் மனித வடிவில் தோன்றினாலும், அவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் மேலானவர். அவரது லீலைகள் கருணை நிறைந்தவை, நித்தியமானவை மற்றும் வைகுண்டவாசிகளாலேயே போற்றப்படக் கூடிய உன்னதமானவை.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more