🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
க்ருஷ்ணதாஸ் கவிராஜ் கோஸ்வாமியின் கோவிந்த லீலாம்ருதத்திலிருந்து
(நண்பகல் லீலைகள் அத் 17.59.-67 சாரி என்ற பெண் கிளியால் பாடப்படுதல்,)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பதம் 1
🌼🌼🌼🌼🌼
குங்குமாக்த காஞ்சனாப்ஜ கர்வ ஹாரி கௌரபா
பீத நாஞ்சிதாப்ஜ கந்த கீர்த்தி நிந்தி சௌரபா
பல்லவேஸ ஸூனு ஸர்வ வாஞ்சிதார்த்த ஸாதிகா
மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா
மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
அழகிய தங்கத்தாமரை மலரின் பெருமையை மங்கச் செய்யும்படியான உருக்கிய பொன்னிறமுடைய ஸ்ரீராதையின் வசீகரிக்கும் மேனியில் செந்நிற குங்குமம் பூசப்பட்டு புது வித அழகை வெளிப்படுத்துகின்றது. அவளது மேனியில் இருந்து வெளிப்படும் நறுமணமோ குங்குமப் பூவால் நிரப்பப்பட்ட தாமரைப் பூவின் வாசனையை மிஞ்சக் கூடியதாக இருக்கின்றது. ஆயர் குலத்தலைவரான நந்த மஹாராஜாவின் தவப்புதல்வரான க்ருஷ்ணரை சகல விதத்திலும் திருப்திபடுத்தக் கூடியவளாக ஸ்ரீராதா மிளிர்கின்றாள். பேரன்பு மிக்க ஸ்ரீராதிகா தனது தாமரைப்பாத சேவையை கருணையுடன் அடியேனுக்கும் தந்தருள்வாராக.
பதம் 2
🌼🌼🌼🌼🌼
கௌரவிந்த காந்தி நிந்தி சித்ர பட்ட ஷாதிகா
க்ருஷ்ண மத்த பிருங்க கேளி புல்ல புஷ்ப வாடிகா
க்ருஷ்ண நித்ய ஸங்கமார்த்த பத்ம பந்து ராதிகா
மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா
மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
அவளது அற்புதமான மனம் மயக்கும் வண்ண மயமான பட்டாடைகளின் மினுமினுப்பானது பவழ குவியல்களை நாணச் செய்கின்றது. அவளது மேனியெனும் தோட்டத்தில் பூக்கும் நறுமணமிகு மலர்களில் க்ருஷ்ணர் என்னும் கரு வண்டானது தேனையுண்டு போதையேறிய நிலையில அதி உன்னத லீலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. அவள் தினந்தோறும் தவறாது சூரியதேவனை வணங்கிக் கொண்டிருக்கின்றாள். ஏனென்றால் அவளது காதலனாக க்ருஷ்ணரின் உன்னத உறவை இடையறாது அடைவதற்காகவே கருணைமிகு ஸ்ரீராதிகா இவ்வெளியேனுக்கு தமது தாமரைப் பாத சேவையை தந்தருள்வாராக.
பதம் 3
🌼🌼🌼🌼🌼
சௌகுமார்ய ஸ்ருஷ்ட பல்லவாலி கீர்த்தி நிக்ரஹா
சந்த்ர சந்தனோத்பலேந்து ஸேவ்ய சீத விக்ரஹா
ஸ்வாபிமார்ஷ பல்லவீஷ காம தாப பாதிகா
மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா
மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
அவளது இளமை ததும்பும் மனம் மயக்க செய்யும் அற்புத அழகானது புத்தம் புதிதாக முளைத்துள்ள இளந்தளிர்களின் அழகை காணாமல் செய்கின்றது. அவளது இனிய மேனயோ சந்திரனின் குளிர்ச்சியும் சந்தனக் கலவையும் தாமரை மலர்கள் மற்றும் கற்பூராதி வாசனை திரவியங்களையும் ஒரு சேர வந்து சேவை செய்ய வைக்க கூடியதாக குளுமையுடன் திகழ்கின்றது. கோபியர்களின் நாயகனுடன் ஸ்பரிசம் கொள்ளும் போது தான் அவள் தனது எரிந்து கொண்டு இருக்கும் விரக தாபத்தில் இருந்து நீங்குகின்றாள். க்ருஷ்ணரின் பேரன்பிற்குரியவளான ஸ்ரீ ராதிகா தனது குளிர்ந்த தாமரைப்பாத சேவையை இந்த தாஸனுக்கு தந்தருள்வாராக.
பதம் 4
🌼🌼🌼🌼🌼
விஸ்வ வந்த்ய யௌவதாபி வந்திதாபி யாரமா
ரூப நவ்ய யௌவனாதி ஸம்பதா ந யத் ஜமா
சீல ஹார்த லீலயா ச ஸா யதா அஷ்தி நாதிகா
மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா
மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
செல்வதை வழங்கும் அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மி தேவியின் அழகானது பிற வளம்மிக்க அனைத்து தேவதைகளாலும் நேசிக்கப்படுகிறது. மேலும் அவளை அனைத்து பிரபஞ்சங்களும் போற்றிப் புகழ்கின்றன. ஆயினும் இத்தணை சிறப்பு மிக்க லக்ஷ்மிதேவியும்கூட ஸ்ரீராதிகாவின் நளினம் வசீகரிக்கும் அழகு வர்ணிக்க இயலாத இளமைத்துள்ளல்கள் மற்றும் பெண்மைக்கே உரிய உன்னத வளங்கள் இவற்றின் முன் நிற்கவும் முடியாதவளாய் திணறுகின்றாள். பிரேமை மிகுந்த ஆனந்த லீலைகளை புரிந்து கொண்டே இருக்கும் ஸ்ரீராதிகாவை விட உயர்ந்தவர் இந்த ஜடவுலகிலோ அல்லது ஆன்மீக உலகிலோ எவருமே இல்லை. இனி இருக்கப் போவதுமில்லை. கருணைவடிவான ஸ்ரீராதிகா தமது தாமரைப் பாத சேவையை இந்த எளியேனுக்கும் தந்தருள்வாராக
பதம் 5
🌼🌼🌼🌼🌼
ராஸ லாஸ்ய கீத நர்ம ஸத் கலாலி பண்டிதா
பிரேம ரம்ய ரூப வேஷ ஸத் குணாலி மண்டிதா
விஸ்வ நவ்ய கோப யோஸித் ஆலித அபி யாதிகா
மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா
மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஸ்ரீராதிகா எண்ணற்ற ஆன்மீக கலைகளை நன்கு கற்றவளாக திகழ்கின்றாள். அதை ராஸ லீலையின் போதும் பாடுவதிலும் வேடிக்கையாக பேசுவதிலும் வெளிப்படுத்துகின்றாள். இயல்பான கருணை அதிரூப அழகு மற்றும் நேர்த்தியான ஆடை ஆபரணங்களே அவளது தெய்வீக தகுதியாக அலங்கரிக்கப்பட்டு திகழ்கின்றது. வ்ரஜ மண்டல கோபியர் மற்றும் யாரெல்லாம் இப்பிரபஞ்சத்தில் பெருமைமிக்கவர்களோ அவர்கள் அனைவரிலும் ஸ்ரீராதிகாவே மிகச் சிறந்தவள் என்று புகழப்படுகின்றாள். கருணைவடிவான ஸ்ரீராதிகா தமது தாமரைப் பாத சேவையை இந்த எளியேனுக்கும் தந்தருள்வாராக
பதம் 6
🌼🌼🌼🌼🌼
நித்ய நவ்ய ரூப கேளி க்ருஷ்ண பாவ சம்பதா
க்ருஷ்ண ராக பந்த கோப யௌவதேஷு கம்பதா
க்ருஷ்ண ரூப வேஷ கேளி லக்ன ஸத் ஸமாதிகா
மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா
மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஸ்ரீ ராதா என்றும் இளமையான அழகு தெய்வீக லீலை மற்றும் க்ருஷ்ணருடனான உன்னத காதல் போன்ற வளங்கள எப்பொழுதும் தனக்கே உரியவளாக விளங்குகின்றாள். அவளது எல்லையற்ற பரவசம் பொங்கும் காதல் மோகத்தின் காரணமாக விரஜ பூமியின் மற்ற இளங்கோபியரும் க்ருஷ்ணருடன் தனித்திருக்கவும் நடுங்குவார்கள். அவள் எப்பொழுதும் ஸ்ரீ க்ருஷ்ணரின் அழகிய திருவுருவம் அவரது ஆடை அணிகலன்கள் மற்றும் அவரது இனிய லீலைகள் பற்றி நினைவுகளிலேயே ஒன்றியிருக்கிறாள். க்ருஷ்ணருக்கே உரியவளான ஸ்ரீராதிகா தமது தாமரைப் பாத சேவையை இந்த எளியேனுக்கும் தந்தருள்வாராக
பதம் 7
🌼🌼🌼🌼🌼
ஸ்வேத கம்ப கண்டகாஷ்ரு கத்கதாதி ஸஞ்சிதா
மர்ஸ ஹர்ஸ வாமதாதி பாவ புஷனாஞ்சிதா
க்ருஷ்ண நேத்ர தோஸி ரத்ன மண்டனாலி தாதிகா
மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா
மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
அவள் எப்போதும் உன்னத பிரேமையின் எட்டுவிதமாக அறிகுறிகளை கொண்டவளாக இருக்கின்றாள். (சாத் த்விக-பாவம்) அதாவது ஆழ்ந்த அன்பின் உன்னத உச்சக்கட்ட நிலைகளான – நடுங்குதல் வியர்த்துக் கொட்டுதல், உடலின் ரோமக்கால்கள் குத்திட்டு நிற்றல், கண்களில் நீர் கொட்டுதல், குரல் நடுங்குதல் போன்ற பலவித பாவ நிலைகளை கொண்டுள்ளாள். அவள் பலவித பரவச உணர்வுகளை ஆபரணங்காய் கொண்டிருக்கின்றாள். அவை தவிப்பு மகிழ்ச்சி முரண்பாடு மற்றும் பலவிதமான வெளிப்டுகிறது. க்ருஷ்ணரின் கண்களுக்கு பேரானந்தத்தை கொடுக்கக் கூடியதான அழகிய ஒளிவீசும் ஆபரணங்களால் அவள் தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். அன்பே அணிகலனான ஸ்ரீராதிகா தமது தாமரைப் பாத சேவையை இந்த எளியேனுக்கும் தந்தருள்வாராக
பதம் 8
🌼🌼🌼🌼🌼
யா க்ஷனார்த்த க்ருஷ்ண விப்ரயோக ஸந்த்தோதிகா
நேக தைன்ய ச் சாபலாதி பாவ வ்ரந்த மோதிகா
யத்ன லப்த க்ருஷ்ண ஸங்க நிர்கதாகி லாதிகா
மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா
மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
க்ருஷ்ணரை விட்டு அரைக்கணம் பிரிய நேர்ந்தாலும் மிகுவும் பாதிக்கப்பட்டவளாய் தனது துரதிஷ்ட நிலையை நினைத்து வருந்தி அமைதி இழந்து மேலும் பிரிவுத் துயரின் அனைத்து உன்னத பாவங்களயும் விரகதாபத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாள். விடாமுயற்சியுடன் அவள் க்ருஷ்ணருடனான உறவை மீண்டும் அடைந்தவுடன் உடனே அவள் பரவச நிலையின் உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவாள். க்ருஷ்ணரின் பிரியமான ஸ்ரீராதிகா தமது தாமரைப் பாத சேவையை இந்த எளியேனுக்கும் தந்தருள்வாராக
பதம் 9
🌼🌼🌼🌼🌼
அஷ்டகேன யஷ் த்வனேன நௌதி க்ருஷ்ண வல்லபாம்
தர்ஷனே அபி ஷைலஜாதி யோஸிதாலி துர்லபம்
க்ருஷ்ண ஸங்க நந்திதாத்ம தாஸ்ய ஸீ து பாஜனம்
தம் கரோதி நந்திதாலி ஸஞ்சயாஸு ஸாஜனம்
மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
பிரபு க்ருஷ்ணருக்கு மிகவும் நெருக்கமானவளாகிய ஸ்ரீமதி ராதாராணியின் கண நேர தரிசனத்தை பெறுவதும் கூட பார்வதிதேவி மற்றும் பிற உயர்நிலையில் உள்ள தேவதைகளுக்கும் மிகவும் கடினமானதாகும். ஆனால் யாரொருவர் ஸ்ரீமதி ராதாராணியை போற்றும் இந்த எட்டுப் பாடல்களை தினமும் அன்புடன் பாடுகின்றார்களோ அவர்கள் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் இணைபிரியாத உறவைப் பெற்று மகிழ்ச்சி அடைவதுடன் நித்ய அமிர்தமாகிய ஸ்ரீராதையின் தாமரைப் பாத சேவையையும் அடையமுடியும். மேலும் அவளது அன்பிற்குரிய அந்தரங்க தோழி என்ற நிலையையும் எளிதில் அடையலாம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment