அஸ்வத்த நாராயணன் ஆதாரம் : பத்ம புராணம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 அஸ்வத்த விருக்ஷ்ம் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் ஒரு அம்சம் என்று சொல்லப்படுகிறது. ஞானிகள் அதை அஸ்வத்த நாராயணன் என்று நாராயண ரூபமாகவே கருதித் தியானம் செய்தார்கள். அதை விளக்கும் கதை ஒன்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று சூத கோஸ்வாமி முனிவர்களிடம் கூறினார். முற்னொரு காலத்தில் சௌராஷ்டிர தேசத்தில் தனஞ்ஜெயன் என்ற பிராமணர் இருந்தார். அவர் மனைவியின் பெயர் சுசீலை. மிகவும் தரித்திர நிலையில் இருந்ததால் தனஞ்ஜெயன் நாள் தோறும் யாசகம் செய்து அவருக்கு கிடைக்கும் தானியத்தைக் கொண்டு அவர்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். தனஞ்ஜெயன் ஒருநாள் யாசகத்திற்கு செல்லாவிட்டால் அன்று அவரும் அவருடைய மனைவியும் பட்டினி கிடக்கத்தான் வேண்டும். இந்த பரம தரித்திர நிலைமை தீர வேண்டுமென்று அவருடைய மனைவி நாள்தோறும் அவர்கள் வீட்டிற்குப் பின்னால் உள்ள அரச மரத்தைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இவ்வாறு இருக்கையில் கோடை கழிந்து குளிர் காலம் வந்தது வழக்கத்திற்கு மாறாக அந்த வருடம் மழையும், குளிரும் மிக அதிகமாக இருந்தது. உடல...