பகவத்கீதையில் (4.10) பகவான் கூறுகிறார்: வீத–ராக–பய–க்ரோதா மன் மயா மாம் உபாஷ்ரிதா: பஹவோ க்ஞான–தபஸா பூதா மத்–பாவம் ஆகதா: “பற்று, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, என்னில் முழுமையாக ஆழ்ந்து, என்னிடம் சரணடைந்து, என்னைப் பற்றிய அறிவால் பலர் இதற்கு முன்பு தூய்மையடைந்துள்ளனர். இவ்விதமாக, அவர்களனைவரும் என்னிடம் உன்னத பிரேமையுடைவராயினர்.” இரு வழிகளில் கிருஷ்ணரை இடையறாது நினைக்க முடியும். ஒன்று, ஒரு பக்தனாக மற்றது, ஒரு பகைவனாக. ஒரு பக்தன் அவனுடைய அறிவினாலும், தவத்தினாலும், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு ஒரு தூய பக்தனாகிறான். அவ்வாறே ஓர் எதிரியும் கிருஷ்ணரைப் பற்றிய பகை உணர்ச்சியுடன் நினைத்த போதிலும், அவரையே இடையறாது நினைத்துத் தூய்மையடைகிறான். இது பகவத் கீதையில் (9.30) பகவானால் பின்வருமாறு உறுதி செய்யப்படுகிறது: அபி சேத் சதுராசாரோ பஜந்தே மாம் அனன்ய - பாக் ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ: “ஒருவன் மிகவும் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பானாயின், அவனைப் புனிதமானவனாகவே கருத வேண்டும். ஏனெனில் அவன் தக்க முறையில் நிலைபெற்றுள்ளான...