தூய பக்தியின் பிரச்சாரகர் தேவரிஷி நாரதர் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 யாரேனும் ஒருவர் இரு தரப்பினரிடையே சண்டை மூட்டிவிட்டால், அவரை “நாரதர்” என்று அழைத்து கிண்டல் செய்வது இந்தியாவில் வழக்கம். நாரதர் என்றவுடன் பலரும் கூறுவது: “ஓ, நாரதரா, கலகம் மூட்டுபவர்தானே.” ஆனால் அவர்கள் அனைவரும் நாரதரை தவறாக புரிந்து வைத்துள்ளனர். மாபெரும் பக்தரும் தெய்வீக ரிஷியுமான நாரதரை ஒரு கோமாளியாக சித்தரித்து பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளதே இதற்கு காரணமாகும். புராணங்களையும் இதிகாசங்களையும் முறையாகப் படிப்பவர்கள் யாரும் நாரதரை கேலிக்கு உரிய நபராக கனவிலும் நினைக்க மாட்டார்கள். புராணக் கதைகளை திரைப்படமாக வெளியிட்டு பணம் சம்பாதிக்க விரும்பும் மனசாட்சியற்ற தயாரிப்பாளர்கள் தங்களுடைய திரைப்படங்களில் நவரசங்களும் வேண்டும் என்ற எண்ணத்தில், யாரேனும் ஒருவரை நகைச்சுவை கதாபாத்திரமாக காட்ட விரும்பி, ஏதோ காரணத்தினால் எங்கேயோ ஆரம்பிக்கப்பட்டு, நாரதர் நகைச்சுவை கதாபாத்திரமாக ஆகிவிட்டார். தெய்வீக ரிஷியான நாரதர் யார் என்பதையும் அவரது பெருமைகள் யாவை என்பதையும் தெரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமையில் இரு...