ராம பக்தி செலுத்துவதில் தன்னை மிஞ்சியோர் யாருமில்லை என உணர்த்தியவர் ஶ்ரீ ராம பக்த அனுமன். இதை உணர்த்தும் விதமாக தன் இதயத்தில் ராமனும், சீதா தேவியும் இருப்பதை தன் நெஞ்சப் பிளந்து காட்டிய அற்புத நிகழ்வு குறித்து இங்கு பார்ப்போம். 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராமனின் பெயரில் 14 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த பரதனின் ஆட்சியின் கீழ் மக்கள் எந்த ஒரு குறை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றாலும், ராமன் பட்டாபிஷேக தினத்தில் தான் மக்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியும் ஆனந்தமும் வந்தது. வேதங்கள் முழங்க, மங்கல கீதங்கள் இசைக்கப்பட்டு, புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. மக்கள் ஆனந்த மழையில் நனைந்தனர். ராமனும், சீதா தேவியும் அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து நாட்டு மக்களும், முனிவர்களும், தேவர்களும் கூட பூமாரி பொழிந்தனர். ...