சியமந்தக மணி __________________________________________________________________________________________________________ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமக்கெதிரான பொய்க் குற்றச்சாட்டை போக்கிக் கொள்ள சியமந்தக மணியைத் தேடிக் கண்டு பிடித்த வரலாற்றையும், ஜாம்பவான், சத்ராஜித் ஆகியோரின் புதல்விகளை அவர் மணந்த வரலாற்றையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. இந்த சியமந்தக மணி தொடர்பான லீலைகளை நடத்தியதன் மூலம், பௌதிக செல்வத்தின் பயனின்மையை பகவான் நிரூபித்துக் காட்டினார். சியமந்தக மணியின் காரணமாக சத்ராஜித் மகாராஜன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவமரியாதை செய்தார் என்று சுகதேவ கோஸ்வாமி குறிப்பிட்டார். இதைக் கேட்ட பரீட்சித்து மகாராஜன் இச்சம்பவத்தை விவரமாக அறிய ஆவல் கொண்டார். இவ்விதமாக சுகதேவ கோஸ்வாமியும் அந்த வரலாற்றைக் கூறினார். சத்ராஜித் மகாராஜன், தான் ஆராதிக்கும் சூரிய தேவனின் கருணையால் சியமந்தக மணியைப் பெற்றார். அந்த மணியை ஒரு சங்கிலியில் பிணைத்து, அதைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு சத்ராஜித் துவாரகைக்குப் பயணமானார். அவரைக் கண்டு சூரிய தேவனே கிருஷ்ணரைக் காண வந்திருப்பதா...