வஞ்சகன்—கண்ணனா ? கர்ணனா? திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் கர்ணன்–மஹாபாரதத்தின் விசித்திரமான கதாபாத் திரங்களில் ஒருவன். ஒருபுறம் தனது கவச குண்டலத்தையும் தானமளிக்கும் பெருஉள்ளம், மறுபுறம் குலப் பெண்மணியை சபையில் அவமானப்படுத்தும் சிறுஉள்ளம். ஒருபக்கம் நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கின்றது. மொத்தத்தில், கர்ணன் முரண்பாடுகளில் சிக்கிய ஒரு கதாபாத்திரம். கர்ணன்–நல்லவனா, கெட்டவனா என்பது பலருக்கும் புரியாத புதிர். நற்குணம் படைத்தவன், ஆனால் தீயோரின் சகவாசத்தினால் அதர்மத்திற்கு துணை நின்று அழிந்து போனவன் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. இருப்பினும், சுமார் 50 வருடங்களுக்கு முன்பு (1964இல்) தமிழில் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படமும், 1977இல் திரு. என்.டி. இராமராவ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த தான வீர சூர கர்ணன் திரைப்படமும், வெறும் திரைப்படங்களாக மட்டும் வந்து செல்லாமல் மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி, கர்...