கிருஷ்ணதாஸ கவிராஜரின் சைதன்ய சரிதாம்ருதத்திலுள்ள (மத்திய லீலை 20.263-264) பின்வரும் பதங்கள் அவதாரத் தத்துவங்களைச் சுருக்கமாகக் கூறுகின்றன ஸ்ருஷ்டி-ஹேது யேய் மூர்தி ப்ரபஞ்சே அவதரே ஸேய் ஈஷ்வர-மூர்த்தி 'அவதார ' நாம தரே மாயாதீத பரவ்யோமே ஸபார அவஸ்தான விஷ்வே அவதாரி ' தரே 'அவதார ' நாம "ஜடவுலகில் தோன்றுவதற்காக, முழுமுதற் கடவுள் தனது திருநாட்டிலிருந்து கீழிறங்கி வருகிறார். அவ்வாறு அவர் தோன்றும்போது, 'அவதாரம் ' என்று அழைக்கப்படுகிறார். ஆன்மீக உலகில் நிரந்தரமாக உள்ள இந்த ரூபங்கள், பௌதிக்க படைப்பிற்குள் தோன்றும் போது 'அவதாரம் ' என்ற பெயரைப் பெறுகின்றனர்." புருஷ அவதாரங்கள், குண அவதாரங்கள், லீலா அவதாரங்கள், சக்தியாவேஷ அவதாரங்கள், மன்வந்தர அவதாரங்கள், யுக அவதாரங்கள் என்று பல்வேறு அவதாரங்கள் உள்ளன—அகிலமெங்கும் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் தோன்றுகின்றனர். ஆயினும், பகவான் கிருஷ்ணரே எல்லா அவதாரங்களின் மூல புருஷராவார். தனது விருந்தாவன லீலைகளைக் காண்பதற்குப் பேராவல் கொண்டிருந்த தூய பக்தர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பது என்னும் முக்கிய நோக்கத்திற்காக பகவான் ஸ்ர...