நைகாந்திகம் தத் தி க்ருதே ‘பி நிஷ்க்ருதே
மன: புனர் தாவதி சேத் அஸத் - பதே
தத் கர்ம - நிர்ஹாரம் அபீப்ஸதாம் ஹ ரேர்
குணானுவாத: கலு ஸத்வ - பாவன:
மொழிபெயர்ப்பு
சமய சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பிராயச்சித்த சடங்கு முறையில் இதயத்தை தூய்மைப்படுத்துவதற்குப் போதுமானவையல்ல. ஏனெனில் பிராயச்சித்தம் செய்த பிறகும், மனம் மீண்டும் பௌதிகச் செயல்களை நோக்கியே ஓடுகிறது. அதனால்தான், பௌதிக செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட விரும்புபவனுக்கு, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஜபிப்பது அல்லது பகவானின் நாமம், புகழ், மற்றும் லீலைகளைத் துதித்துப் போற்றுவது, பரிபூரண பிராயச்சித்த முறையாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய நாம ஜபமும், துதியும் ஒருவனது இதயத்திலுள்ள அழுக்கை முழுமையாகப் போக்கிவிடுகிறது.
பொருளுரை
இச்சுலோகத்திலுள்ள கூற்றுகள், ஸ்ரீமத் பாகவதத்தில் (1.2.17) ஏற்கனவே பின்வருமாறு உறுதி செய்யப்பட்டுள்ளன:
ஸ்ருண்வதாம் ஸ்வ கதா: க்ருஷ்ண:
புண்ய ஸ்ரவண கீர்தன:
ஹ்ருதி அந்த: ஸ்தோ ஹி அபத்ராணி
விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம்
“எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களை ஆதரிப்பவரும், பரமபுருஷருமாகிய ஸ்ரீ கிருஷ்ணர், முறையாகக் கேட்பதாலும், பாடுவதாலுமே புண்ணியம் தரக்கூடிய அவரது செய்திகளைக் கேட்பதிலும், பாடுவதிலும் உள்ள ஆவலை வளர்த்துக் கொண்டுள்ள பக்தனின் இதயத்திலிருந்து ஜட இன்பங்களுக்கான ஆசைகளை அகற்றிவிடுகிறார்.” ஒருவன் தமது நாம், புகழ், இயல்வுகள் ஆகியவற்றைத் துதித்துப் போற்றுவதை பகவான் அறிந்த உடனேயே, அவர் அவனது இதயத்திலிருந்து அழுக்கை அகற்ற தானாக முன்வந்து உதவி செய்கிறார். இது அவரது தனிப்பெருங் கருணையாகும். எனவே இவ்வாறு அவரது புகழைப் பாடுவதாலாயே ஒருவன் தூய்மையடைவது மட்டுமின்றி, புண்ணிய செயல்களின் பலன்களையும் அடைகிறான் (புன்ய - ஸ்ரவண - கீர்த்தன). புன்ய - ஸ்ரவண - கீர்த்தன என்பது பக்தித் தொண்டு முறையைக் குறிக்கிறது. ஒருவன் பகவானின் நாமம், லீலைகள் அல்லது இயல்புகளின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அவைகளைப் பற்றி கேட்பதால் அல்லது பாடுவதாலேயே அவன் தூய்மையடைகிறான். இத்தகைய தூய்மை ஸத்வ - பாவனம் என்று அழைக்கப்படுகிறது.
ஒருவன் தனது வாழ்வை தூய்மைப்படுத்திக் கொண்டு, முக்தியடைவதுதான் மனித வாழ்வின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஜட உடலைப் பெற்றுள்ளவரை, தூய்மையற்றவனாகவே ஒருவன் கருதப்படவேண்டும். அனைவரும் உண்மையான ஆனந்த வாழ்வைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்றாலும், தூய்மையற்ற இத்தகைய ஒரு பௌதிக நிலையில் அவர்களால் அதை அனுபவிக்க முடியாது. எனவே ஸ்ரீமத் பாகவதம் (5.5.1) கூறுகிறது, தபோ திவ்யம் புத்ரா யேன ஸத்வம் கத்யேத்: தன் வாழ்வை தூய்மையுடையதாக்கி, ஆன்மீக படித்தரத்திற்கு வர ஒருவன் தவம் செய்ய வேண்டும். பகவானின் நாமம், புகழ், இயல்புகள் ஆகியவற்றைத் துதிப்பதும், பாடுவதுமான இந்த தவம், தூய்மையடைவதற்குரிய மிகச்சுலபமான வழிமுறையாகும். இதனால் எல்லோரும் மகிழ்ச்சியடைய முடியும். எனவே தங்கள் இதய சக்தியை விரும்பும் அனைவரும் இந்த வழி முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். கர்ம, ஞான, யோக போன்ற பிற முறைகளால் இதயத்தை முழுமையாக சுத்தம் செய்ய முடியாது.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 6.2.12 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment