நினைவில் கொள்ளுதல் என்றால் கேட்பதும் உச்சரிப்பதுமாகும் அப்யாஸ-யோக-யுக்தேன சேதஸா நான்ய-காமினா பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தானுசிந்தயன் மொழிபெயர்ப்பு பரம புருஷ பகவானாக என்னை தியானித்து, எப்போதும் தனது மனதை நினைப்பதில் ஈடுபடுத்தி, இவ்வழியிலிருந்து சற்றும் பிறழாது பயிற்சி செய்பவன், பார்த்தனே, நிச்சயமாக என்னை அடைகிறான். பொருளுரை இப்பதத்தில் தன்னை நினைப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணர். ஹரே கிருஷ்ண மஹாமந்திர உச்சாடனத்தின் மூலம் கிருஷ்ணரைப் பற்றிய நினைவு மீண்டும் எழுப்பப்படுகிறது. பரம புருஷரின் ஒலி அதிர்வினை கேட்பதும் உச்சரிப்பதுவுமான இந்த வழிமுறையில், காது, நாக்கு மற்றும் மனமும் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த உன்னதமான தியான முறையினை பயிற்சி செய்து மிகவும் எளிதானதாகும். மேலும், இவ்வழிமுறை பரம புருஷரை அடைய உதவுகின்றது. புருஷம் என்றால் அனுபவிப்பாளர். உயிர்வாழிகள், இறைவனின் நடுநிலை சக்தியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், பௌதிகத்தின் களங்களத்தில் உள்ளனர். தங்களை அனுபவிப்பாளராக எண்ணிக் கொண்டுள்ள போதிலும், அவர்கள் பரம அனுபவிப்பாளர் அல்ல. நாராயணர், வாஸுதேவர் போன்...