ரோஹிதரின் மகன் ஹரிதன். ஹரிதரின் மகன் சம்பன். இவர் சம்பாபுரி எனும் நகரத்தை நிர்மாணித்தார். சம்பனின் மகன் சுதேவன். சுதேவனின் மகன் விஜயன். விஜயனின் மகன் பருகன். பருகனின் மகன் விருகன். விருகனின் மகனான பாஹுகன் அவரது எதிரிகளால் மிகவும் தொல்லைப்படுத்தப்பட்டார். எனவே அவர் வீட்டைத் துறந்து மனவைியுடன் காடு சென்றார். அவர் அங்கு இறந்துபோனதும் அவருடைய மனைவி உடன்கட்டையேற விரும்பினாள். ஆனால் அவள் கர்ப்பவதியாக இருந்ததை அறிந்த ஓளரவ ரிஷி அவளைத் தடுத்துவிட்டார். இவளது சக்களத்திகள் இவளுக்கு உணவுடன் விஷம் கலந்து கொடுத்துவிட்டனர். ஆயினும் அவளுடைய மகன் விஷத்துடனேயே பிறந்தான். எனவே அம்மகன் சகரன் என்று பெயர் சூட்டப்பட்டான். (ஸ என்றால் “உடன்”, கர என்றால் “விஷம்”) சகர மகாராஜன், தன் ஆன்மீக குருவான ஓளரவரின் உத்தரவுப்படி, யவனர், சகர், ஹைஹயர் மற்றும் பர்பரஸ் முதலான பல ஜாதிகளை சீர்படுத்தினார். பிறகு மீண்டும் ஓளரவரின் உத்தரவுப்படி, அரசர் அஸ்வமேத யாகங்களைச் செய்தார். ஆனால் யாகக் குதிரையை இந்திரன் அபகரித்துச் சென்றுவிட்டார். சகர மகாராஜனுக்கு சுமதி மற்றும் கேசினி என்ற இரு மனைவிகள் இருந்தனர். குதிரையைத...