Skip to main content

பகவத் கீதை உண்மையுருவில் – ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -2

 


பகவத் கீதை உண்மையுருவில் – ஒரு கண்ணோட்டம்

அத்தியாயம் -2

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

அர்ஜுனனின் இதர சந்தேகங்களும் சரணடைதலும்


இரண்டாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில், கண்ணீர் மல்க அமர்ந்திருந்த அர்ஜுனனைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் தனது உபதேசத்தை மெல்ல ஆரம்பித்தார். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் பேசும்போதெல்லாம், ஸ்ரீ பகவான் உவாச என்று கூறப்பட்டுள்ளது. பிரம்மன், பரமாத்மா, பகவான் என்று மூன்று நிலைகளில் உணரப்படும் பரம்பொருளின் இறுதிநிலை பகவான் எனப்படுகிறது. செல்வம், புகழ், பலம், அழகு, அறிவு, தியாகம் ஆகிய ஆறு ஐஸ்வர்யங்களையும் முழுமையாக பெற்றிருப்பதால், ஸ்ரீ கிருஷ்ணர், இங்கே பகவான் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு சமமாகவோ அவரைவிட உயர்வாகவோ யாரிடமும் இந்த ஐஸ்வர்யங்கள் இல்லை என்பதால், கிருஷ்ணரே பகவான், முழுமுதற் கடவுள்ஶிஇவ்வுண்மை, கீதை முழுவதும் வியாபித்துள்ளது.

அர்ஜுனனிடம் திடீரென்று எழுந்துள்ள இத்தகு களங்கங்கள் பண்புள்ள மனிதனுக்கு உகந்தவை அல்ல என்றும் அவமானத்தைக் கொடுப்பவை என்றும் கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், அற்பமான பலவீனத்தை விட்டுவிட்டு போரிடும்படி அறிவுறுத்தினார். ஆனால் அர்ஜுனனோ தனது வாதத்தைத் தொடர்ந்தான்: எதிரில் நிற்பவர்கள் எனது வழிபாட்டிற்குரிய பீஷ்மரும் துரோணரும். எதிரிகளைக் கொல்லும் கிருஷ்ணா, நீ உமது ஆசிரிய ரான சாந்திபனி முனிவரையும் பாட்டனா ரான உக்ரசேனரையும் கொல்வாயா?” மேலும், இந்த மஹாத்மாக்களைக் கொன்று வாழ்வதைக்காட்டிலும் பிச்சை யெடுப்பதே மேல் என்றும், அவர்கள் கொல்லப்பட்டால் தாம் அனுபவிப்பவை அனைத்திலும் இரத்தக்கறை படிந்திருக் கும் என்றும் உரைத்தான்.

இவ்வளவு காரணங்களைக் கண்டபோதிலும், போரிடுதல் தனது கடமை என்பதையும் உணர்ந்திருந்த காரணத்தால், என்ன செய்வதென்று தனக்குப் புரியவில்லை என்று கூறி, தன் குழப்பத்திற்குத் தீர்வு கொடுங்கள் என்று மன்றாடியவண்ணம் அர்ஜுனன் தன்னை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சீடனாக ஒப்படைத்தான். அர்ஜுனனைப் போன்ற மிகச்சிறந்த தகுதிவாய்ந்த நபராக இருந்தாலும், வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அல்லது அவரது முறையான பிரதிநிதியிடம் சீடனாக சரணடைவது அவசியம் என்பதை இச்செயலிலிருந்து நாம் அறியலாம். கோவிந்தா, நான் போரிட மாட்டேன்,” என்று கூறி அமைதியான அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் புன்சிரிப்புடன் கீதையை உபதேசிக்கத் தொடங்கினார்.

நீ இந்த உடலல்ல, ஆத்மா

அர்ஜுனன் தன்னிடம் சரணடைந்த சீடன் என்பதால், நட்பு ரீதியிலான அனைத்து வார்த்தைகளையும் கைவிட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உடனடியாக குருவின் ஸ்தானத்தை ஏற்று, பண்டிதனைப் போல நீ பேசினாலும், வருத்தப்பட வேண்டாதவற்றிற்காக வருத்தப்படுவதால், உண்மையில் நீ ஒரு முட்டாள்; அறிஞர்கள் இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் வருந்துவதில்லை” என்று தனது சீடனைக் கண்டிக்கின்றார். போரினால் உறவினர்கள் இறந்துவிடுவர் என்று நினைத்த அர்ஜுனனிடம், நீயோ, நானோ, இங்குள்ள மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை,” என்று கூறி, உடல் மட்டுமே அழிவிற்கு உட்பட்டது என்றும், உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றது என்றும் விளக்கினார்.

இதுவே ஆன்மீக ஞானத்தின் முதல் பாடமாகும். இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் தன்னை இந்த உடலாக நினைத்து, உடல் சம்பந்தமுடைய விஷயங்களை தன்னுடையதாக நினைத்துக் கொண்டுள்ளனர். அதன்படி, ஒவ்வொருவரும் தனது வீடு, மனைவி, மக்கள், உறவினர், நிலம், நாடு, ஜாதி, மதம் என்று தங்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். ஆனால் இத்தகு அடையாளங்கள் அனைத்தும் உடலைச் சார்ந்தவை. நாம் இந்த உடலே அல்ல என்னும்பட்சத்தில், இவ்வடையாளங்கள் அனைத்தும் போலியான அடையாளங்களே. ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது, உடல் அழியும்போது ஆத்மா அழிவதில்லை. எந்த ஆயுதத்தினாலும் ஆத்மாவை வெட்டவோ, எரிக்கவோ, உலர்த்தவோ, நனைக்கவோ முடியாது.

உடலினுள் இருக்கும் ஜீவன், சிறுவயது, இளமை, முதுமை என பல பருவங்களைக் கடந்துசெல்வதைப் போல, மரணத்தின்போது வேறு உடலை அடைகிறான். இந்த உடல் மாற்றம், நாம் நமது பழைய கிழிந்துபோன ஆடையைத் துறந்து புதிய ஆடையை உடுத்திக் கொள்வதைப் போன்றதே. பிறந்தவர் அனைவருக்கும் மரணம் நிச்சயம்; மரணமடைந்தோர் அனை வருக்கும் மறுபிறவியும் நிச்சயம். நிதான புத்தியுடையோர் இந்த உடல் மாற்றத் தினால் பாதிக்கப்படுவதில்லை.

ஆத்ம ஞானத்தைப் பற்றிய இவ்விளக்கம், உறவினர்களின் மீதான அர்ஜுனனின் பாசத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணர் அளித்த பதிலாகும்.

கடமையைச் செய்தால் இன்பமடையலாம்

அடுத்ததாக, கடமையைச் செய்வதால் மகிழ்ச்சியடையலாம் என்னும் கர்ம காண்ட கொள்கையை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக் கினார். சத்திரியனான அர்ஜுனனின் கடமை தர்மத்திற்காகப் போர் புரிவதே, அதைவிட சிறந்த கடமை அவனுக்கில்லை என்றும், அவன் போர் புரியத் தயங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். அவ்வாறு கடமையைச் செய்வதன் மூலம் ஸ்வர்க லோகத்தின் கதவுகள் திறக்கப்படும். மாறாக, கடமையைச் செய்யாவிடில், அதற் கான பாவத்தை அனுப விக்க வேண்டும்; சிறந்த போர்வீரன் என்னும் நற்பெயர் கெட்டுவிடும்; கோழை என்று மக்கள் அவதூறு செய்வர்; அவமானம் மரணத்தை விடக் கொடியது. போர்க் களத்தில் மடிந்தால் ஸ்வர்கம் செல்லலாம், வென்றால் இவ்வுலகை ஆளலாம்ஶீஎனவே, உறுதியுடன் எழுந்து போர்புரிவாயாக என்று அர்ஜுனனுக்கு பகவான் ஊக்கமளித்தார்.

ஆத்ம ஞானத்தை விளக்கிய பின்னர், கடமையைச் செய்து ஸ்வர்கத்தில் இன்பமடையலாம் என்னும் கீழ்நிலைக் கொள்கையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்தியது சற்று ஆச்சரியத்தைத் தரலாம். நாம் இந்த உடலல்ல என்று முடிவான பின்னர், உடலால் கிடைக்கும் ஸ்வர்க லோக இன்பங்களை கிருஷ்ணர் எதற்காகப் பரிந்துரைக்க வேண்டும்?

போருக்குப் பின் தன்னால் மகிழ்ச்சியடைய முடியாது என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கூறியிருந்தான்; அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் போரினால் எவ்வாறு இன்பமடையலாம் என்பது பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கினார். மேலும், தனது கடமையைச் செய்தால் (போர் புரிந்தால்) பாவம் வரும் என்று கூறிய அர்ஜுனனின் வாதத்தை கடமையைச் செய்யாவிடில் (போர் புரியாவிடில்) நிச்சயம் பாவம் வரும் என்று கூறியதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் முறியடித்தார்.

இருப்பினும், புலனின்பத்திற்காக கடமையைச் செய்தல் என்னும் இந்நிலையினை, புத்தி யோகம் என்னும் உயர்நிலையை எடுத்துரைத்ததன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உடனடியாக கண்டிக்கின்றார்.

பாவத்தில் சிக்காமல் செயல்படுதல்

இன்பமடைவதற்காக கடமையைச் செய்தல் என்னும் நிலைக்கு அடுத்தபடியாக, கர்ம பந்தத்திலிருந்து முற்றிலும் விடுபடுவதற்குரிய புத்தி யோகத்தை இறைவன் விளக்குகின்றார். பக்தி யோகத்தின் பயிற்சி நிலையே புத்தி யோகம் எனப்படுகிறது. புத்தி யோகத்தின்படி செயல்பட்டால் பாவ விளைவுகள் ஒருவனை அண்டாது; இம்முயற்சியில் சற்றும் இழப்பு கிடையாது; சிறிதளவு முன்னேற்றமும் மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றும். மேலும், இவ்வழியில் உள்ளவர்கள் ஒரே இலட்சியத்துடனும் திடமான உறுதியுடனும் இருப்பர்.

ஆனால் சிற்றறிவுடைய மனிதர் களோ பக்தி யோகத்தில் செயல்படாமல், வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப் பட்டு ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுவதையும் புலனின்பத்தையுமே விரும்புகின்றனர். அத்தகு மக்களின் இதயத்தில் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை. எனவே, வேதங்களின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக ஒருவன் மாற வேண்டும். இலாப நஷ்டம், இன்ப துன்பம், வெற்றி தோல்வி போன்ற இருமைகளிலிருந்து விடுபட்டு பக்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.

கிணற்றின் தேவைகள் அனைத்தும் பெரும் நீர்த்தேக்கத்தினால் பூர்த்தி செய்யப்படுவதுபோல, வேதங்களின் நோக்கங்கள் அனைத்தும் அதனை அறிந்த பக்தனால் அடையப்படுகின்றன. வேதங்களைப் பயில்வதன் நோக்கம் கிருஷ்ணரை அறிவதே; எனவே, கிருஷ்ணரின் திருநாமத்தைச் சொல்பவன் எப்படிப்பட்ட இழிந்த குலத்தில் பிறந்திருந்தாலும், அவன் எல்லா புனித ஸ்தலங்களில் நீராடி, எல்லா வேத இலக்கியங்களையும் பன்முறை கற்று, யாகங்கள், தவங்கள் என எல்லாவற்றையும் ஏற்கனவே செய்தவனாவான். மேலும், அனைத்து மோசமான செயல்களையும் பக்தித் தொண்டின் உதவியால் தூரமாக வைத்துவிட்டு, அவன் கிருஷ்ணரிடம் சரணடைகிறான். அவ்வாறு சரணடைந்து பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன் பாவ புண்ணியங்களின் விளைவுகளிலிருந்து விடுபடுகிறான்; முக்தி பெற்று, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் திருத்தலமான வைகுண்டத்தை அடைகிறான்.

புத்தி யோகம் எனப்படும் பக்தி யோகத்தை விளக்கியதன் மூலம், பாவ விளைவுகளைக் கண்ட அர்ஜுனனின் பயத்தை கிருஷ்ணர் அகற்றினார். புத்தி யோகத்தைப் பயிற்சி செய்பவன், வேதச் சடங்குகளுக்கு அப்பாற்பட்டவன் என்று கூறியதன் மூலம், குலம் நாசமடையும் என்னும் அர்ஜுனனின் வாதமும் முறியடிக்கப்பட்டது. மேலும், புத்தி யோகத்தில் நிலைபெற்றவனிடம் குழம்பிய நிலை என்ற கேள்விக்கே இடமில்லை.

அர்ஜுனன் எடுத்துரைத்த அனைத்து வாதங்களும் இத்துடன் (இரண்டாம் அத்தியாயத்தின் 53ஆவது ஸ்லோகத்துடன்) கிருஷ்ணரால் முறியடிக்கப்பட்டுவிட்டன. இனி தொடர்பவை அர்ஜுனனின் சந்தேகங்களும் ஸ்ரீ கிருஷ்ணரின் விடைகளுமே.

புத்தி யோகத்தில் நிலைபெற்றவனின் அறிகுறிகள்

புத்தி யோகத்தில் நிலைபெறும்படி கிருஷ்ணர் அறிவுறுத்த, அவ்வாறு நிலைபெற்றவனின் அறிகுறிகள் யாவை, அவனது மொழி என்ன, எவ்வாறு பேசுவான், எவ்வாறு அமருவான், எவ்வாறு நடப்பான் என்ற கேள்விகளை அர்ஜுனன் எழுப்பினான்.

மனக் கற்பனையில் எழும் புலனின்பத்திற்கான எல்லா ஆசைகளையும் துறந்து, தூய்மையடைந்த மனதுடன் தன்னில் திருப்தியடைந்து வாழ்வதே ஸ்தித-பிரக்ஞனின் (தன்னில் நிலைபெற்றவனின்) அறிகுறி என்று விளக்கமளித்த ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் இதர கேள்விகளுக்கும் தொடர்ந்து பதிலளிக்கின்றார்.

பேசும் விதம்: பேசுதல் என்பது மற்றவர்களின் செயல்களுக்கு ஒருவன் எவ்வாறு பிரதிபலிக்கின்றான் என்பதைக் காட்டும். உடலாலும் மனதாலும் எழும் துன்பங்கள், இதர உயிர்களால் எழும் துன்பங்கள், இயற்கையினால் எழும் துன்பங்கள் ஆகிய மூவகைத் துன்பங்கள் அவனை நெருங்கும்போது அவன் பாதிக்கப்பட மாட்டான். பற்றுதல், பயம், கோபம் போன்றவை அவனைத் தாக்கினாலும், அவன் அவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வான். நன்மை தீமை, புகழ்ச்சி இகழ்ச்சி என எது நேர்ந்தாலும் பாதிக்கப்படாமல் இருப்பான்.

அமரும் விதம்: அமருதல் என்பது புலன்களை எவ்வாறு ஒருவன் செயல்படுத்தாமல் உள்ளான் என்பதைக் குறிக்கும். ஆமை எவ்வாறு தன் அங்கங்களை கூட்டிற்குள் இழுத்துக் கொள்ளுமோ, அதுபோல ஸ்தித-பிரக்ஞன் தனது புலன்களை அபாயகரமான நேரங்களில் (புலனின்பப் பொருள்களின் தொடர்பு கிட்டும்போது) உள்ளிழுத்துக் கொள்கிறான். பக்தித் தொண்டினால் உயர்ந்த சுவையை அவன் அடைவதால், ஜடவுலகின் தாழ்ந்த சுவைகளில் அவன் விருப்பம் காட்டுவதில்லை. சக்தியுடைய புலன்கள் யோகியையும் திசைதிருப்பக்கூடியவை என்பதால், ஸ்தித-பிரக்ஞன் தனது புலன்கள் அனைத்தையும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்துகிறான். அவ்வாறு ஈடுபடுத்தாமல், புலனின்பப் பொருள்களை தியானிப்பவன், அவற்றில் பற்றுதல் கொள்கிறான்; பற்றுதலிலிருந்து காமமும், காமத்திலிருந்து கோபமும், கோபத் திலிருந்து மயக்கமும், மயக்கத்திலிருந்து நினைவிழப்பும், நினைவிழப்பிலிருந்து அறிவு இழப்பும், அதிலிருந்து வீழ்ச்சியும் ஏற்படுகிறது.

நடக்கும் விதம்: நடத்தல் என்பது புலன்களை ஒருவன் எவ்வாறு செயல்படுத்துகிறான் என்பதைக் குறிக்கும். விருப்பு வெறுப்பின்றி முக்திக்கு உகந்த வழியில் அவன் புலன்களை செயல்படுத்துகிறான். படகை கடுங்காற்று அடித்துச் செல்வதைப் போல, அலைபாயும் ஒரே ஒரு புலன்கூட மனிதனின் அறிவை அடித்துச் சென்றுவிடும் என்பதை உணர்ந்த பக்தன், பொதுமக்களின் இரவில் (அதாவது, ஆன்மீக விஷயங்களில்) விழித்தும், அவர்களது பகலில் (அதாவது, புலனின்ப விஷயங்களில்) உறங்கியும் வாழ்கிறான். அவன் அவ்வாறு வாழ்வதால், எத்தனையோ நதிகள் கலந்தாலும் சஞ்சலமின்றி இருக்கும் கடலைப் போன்று, எத்தனையோ ஆசைகள் அவனை அணுகினாலும், அவன் சஞ்சலமின்றி இருக்கின்றான்.

பொதுவாக, ஸாங்கிய யோகம் எனும் தலைப்பில் அறியப்படும் இந்த அத்தியாயம், கீதையின் அனைத்துக் கருத்துக்களையும் சுருக்கமாக உரைப்பதால், கீதையின் உட்பொருள் சுருக்கம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

"இக்கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...