பஹூலாஸ்வன் கேட்டார்: 'தேவரிஷி கோவர்தனம் சாக்ஷாத் மலைகளின் அரசனும் ஸ்ரீ ஹரிக்குப் பிரியமானதும் என்பது மிக ஆச்சரியமான விஷயமாகும். அதற்கு ஈடாக இப்புவியிலும் வேறு தீர்த்தம் இல்லை, சுவர்க்கத்திலும் கிடையாது. தாங்கள் சாக்ஷாத் ஹரியின் இதயமாயிருப்பவர். ஆகவே இந்த கிரிராஜன் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருமார்பிலிருந்து எப்போது தோன்றினார் என்று கூறுங்கள். ஸ்ரீநாரதர் கூறினார்: 'அரசே! கோலோகம் தோன்றிய வரலாற்றைக் கேள். இது ஸ்ரீஹரியின் ஆதி லீலையோடு தொடர்புடையது. மனிதனுக்கு தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லது. இயற்கைக்கு அப்பாலுள்ள சாக்ஷாத் பரிபூர்ணதம பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சர்வசமர்த்தர். நிர்குண புருஷர், அனாதி, ஆத்மா ஆவார். அவரது தேஜஸ் உள்ளார்ந்தது. ஸ்வயம் பிரகாசரான அந்தப் பிரபு எப்போதும் ஆனந்தமயமாயிருப்பவர். அவர்மீது இருப்பிட கர்வம் கொண்ட தேவர்களின் ஈஸ்வரனான காலனும் அதிகாரம் செலுத்த முடியாது. மாயையே அவர்மீது தன் செல்வாக்கைப் பிரயோகிக்க முடியாதென்றால் மஹத்தத்துவம்,சத்வம் முதலான குணங்கள் எப்படி வசப்படுத்த முடியும்? மன்னா! அவரிடம் ஒருபோதும் மனம், சித்தம், புத்தி அகங...