பலமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பகவான் கிருஷ்ணரின் லீலைகள்
விஸ்தரேணாத்மனோ யோகம்
விபூதிம் ச ஜனார்தன
பூய: கதய த்ருப்திர் ஹி
ஷ்ருண்வதோ நாஸ்தி மே (அ)ம்ருதம்
மொழிபெயர்ப்பு
ஜனார்தனா உமது வைபவங்களின் யோக சக்தியைப் பற்றி தயவு செய்து விவரமாகக் கூறவும். உம்மைப் பற்றிக் கேட்பதில் நான் ஒருபோதும் நிறைவடைவதில்லை. ஏனெனில், உம்மைப் பற்றி அதிகமாகக் கேட்கும் போது, உமது வார்த்தைகளின் அமிர்தத்தை நான் அதிகமாக சுவைக்க விரும்புகிறேன்.
பொருளுரை
இதே போன்ற கருத்தினை நைமிசாரண்யத்தில் சௌனகர் தலைமையில் கூடிய ரிஷிகள் சூத கோஸ்வாமியிடம் கூறினர்:
வயம் து ந வித்ருப்யாம
உத்தம-ஷ் லோக-விக்ரமே
யச் ச்ருண்வதாம் ரஸ-க்ஞானம்
ஸ்வாது ஸ்வாது பதே பதே
"உத்தம சுலோகங்களால் புகழப்படும் கிருஷ்ணரது திவ்ய லீலைகளை ஒருவன் தொடர்ந்து கேட்டாலும், அவன் ஒருபோதும் நிறைவடைவதில்லை. கிருஷ்ணரது திவ்யமான உறவில் நுழைந்தவர்கள், அவரது லீலைகளைப் பற்றிய வர்ணனைகளின் ஒவ்வொரு பதத்தையும் அனுபவிக்கின்றனர்." (ஸ்ரீமத் பாகவதம் 1.1.19) இவ்வாறாக கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் அர்ஜுனன் ஆவலுடன் இருக்கின்றான், அதிலும் குறிப்பாக, எங்கும் நிறைந்த பரம புருஷராக அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதைப் பற்றி.
அமிர்தத்தைப் பொறுத்தவரை, கிருஷ்ணரைப் பற்றிய அனைத்து வர்ணனைகளும் அமிர்தம் போன்றதே. இந்த அமிர்தம் அனுபவத்தினால் உணரக்கூடியதாகும். நவீன நாவல்களும் கதைகளும் சரித்திரங்களும், இறைவனின் லீலைகளிலிருந்து வேறுபட்டவை ஜடவுலகக் கதைகளைக் கேட்பதில் ஒருவன் சோர்வடையலாம். ஆனால் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் அவன் சோர்வடைவதே இல்லை. இந்த காரணத்தினால்தான் அகில உலகத்தின் வரலாறு முழுவதும் இறைவனின் அவதாரங்களைப் பற்றிய லீலைகளால் நிறைந்துள்ளது. பகவானின் பல்வேறு அவதார லீலைகளை எடுத்துரைக்கும் பழங்கால வரலாற்றுப் புத்தகங்களே புராணங்கள். இவ்விதமாக, படிக்கப்படும் விஷயம் மீண்டும் மீண்டும்படிக்கப்பட்டாலும் என்றும் புதிதாக விளங்குகின்றது.
( ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை / பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் 10.18)

Comments
Post a Comment