நாபாகன்
🔆🔆🔆🔆🔆🔆🔆
வைவஸ்வதமனுவுக்கு இக்ஷ்வாகு, ந்ருகன், ஸர்பாதி, நிஷ்டன், த்ருஷ்டன், கரூஷகன், நரிஷ்யந்தன், வ்ருஷத்ரன், நாபாகன், நபன் என பத்து புத்திரர்கள் இருந்தனர். பூர்ணத்துவம் அடையும் பொருட்டு தவம் செய்ய எண்ணிய வைவஸ்வதமனு, இக்ஷ்வாகுவிடம் இராஜ்யத்தை ஒப்படைத்து, உன் தம்பிகளுக்கு நீயே இராஜ்யம் பிரித்துக் கொடுப்பாயாக என்று கூறிவிட்டு தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிட்டார்.தந்தையின் ஆணையை சிரமேற் கொண்டு இக்ஷ்வாகு. தம் தம்பிகளுக்கு அவரவர் தகுதிக்கேற்றார் போல் பிரித்துத் தர விழைந்தார். அவரவர் தகுதியை ஆலோசனை செய்த போது தனது எட்டாவது தம்பி நாபாகனின் நிலையையும் ஆலோசனை செய்தார்.
நாபாகன் இளம் வயது முதலே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். ஆத்ம ஞான விளங்கிய அவர் இல்வாழ்கையில் பற்றின்றி தவத்தில் ஆழ்ந்தவராக குரு குலத்திலேயே காலம் கழித்தார். இல் வாழ்க்கையில் பற்றின்றி நைஷ்டிக பிரம்மசாரியாக விளங்கும் நாபாகன் இனி உலகியல் வாழ்க்கைக்கு வரமாட்டார் எனவும், பொருட்பற்று இல்லாது ஆத்மயோகத்தில் ஆழ்ந்திருக்கும் நாபாகனுக்குப் பொருள் ஒதுக்குதல் வீண் எனவும் நினைத்த இக்ஷ்வாகு, நாபாகனை விடுத்து மற்ற சகோதரர்களுக்குப் பாகம் பிரித்துக் கொடுத்தார். ஒருநாள், தவத்தினின்று மீண்டுவந்த நாபாகன், தன் மூத்த அண்ணனை அணுகி தன் பாகத்தைத் தருமாறு வேண்டினார். இதனை எதிர்பார்க்காத அண்ணனோ திகைத்து நின்றார். ஒருவாறாகத் தன்னைத் தேற்றிக் கொண்டு, நாபாகா உன் பங்கு பற்றி நம் தந்தையிடம் பேசிக்கொள்ளலாம் வா! என பதிலளித்தார். சகோதரர்கள் பதின்மரும் கூறியதை கேட்டுக் கொண்ட வைவஸ்வத மனு, நாபாகன் என்னிடம் தங்குமாறும் மற்ற அனைவரையும் நாடு திரும்புமாறும் பணித்தார்.
பிறகு நாபாகா இனி நீ உன் பங்கைப்பற்றிக் கவலைப்படாதே உன் வாழ்நாளில் தேவையான பொருட்செல்வம் உன்னை வந்தடைவதற்கு ஓர் உபாயம் சொல்கிறேன் கேள் ! மகனே ! கங்கைக் கரையில் ஆங்கிரஸர் மற்றும் சில முனிவர்கள் சத்ர யாகம் செய்து கொண்டிருக்கின்றனர். இன்றிலிருந்து ஆறாம் நாளன்று அவர்கள் செய்யவேண்டிய வைல்வதேவக்ரியா சமயத்தில் சொல்ல வேண்டிய வேத சூக்தம் அவர்களுக்கு மறந்து போகும். அச்சமயம் நீ அங்கிருந்து அவர்களுக்கு ஞாபகப்படுத்துவாயாக. மகிழ்ச்சியடைந்து முனிவர்கள் உனக்கு வேண்டிய தனத்தை அளிப்பார்கள். அச்செல்வம் உன் வாழ்நாளை செய்வனே நடத்தப் போதுமானதாக இருக்கும். ஆகையால் இப்பொழுதே புறப்படுவாயாக என்று கூறினார். தந்தை சொல்லை சிரமேற்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, ஆங்கிரஸர் சத்ரயாகம் செய்யும் இடத்தை அடைந்தார். ஆறாம் நாளன்று தந்தை சொன்னவாறே அவர்களுக்கு சில சூக்தங்கள் மறந்து போயின நாபாகன் அந்த சூக்தங்கள் அடியெடுத்துக் கொடுத்தார். மகிழ்வுற்ற முனிவர்கள் குழந்தாய் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த யாகம் முடிவடையப் போகிறது யாகம் முடிந்தவுடன் யாக சாலையில் மீதமுள்ள பொருட்களனைத்தையும் நீயே எடுத்துக் கொள்! எனக் கூறினர் யாகம் இனிதே நிறைவடைந்தது. முனிவர்கள் தாங்கள் கூறியவாறே யாகசாலையில் உள்ளவற்றை அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர்.
நாபாகன் அவ்விடத்தைப் பார்த்தார். பொன்னும் பொருளும் குவியல் குவியலாகக் காணப்பட்டது. தன் அண்ணன் தனக்கு உரிய பாகத்தைக் கொடுத்திருந்தால் எவ்வளவு தனம் கிடைத்திருக்குமோ அதைவிட பல மடங்கு அதிகம் காணப்படுகிறதே ! என மனதில் நினைத்தவாறே அப்பொருட்குவியலை ஆசையாகத்தொட்டார். நாபாகா ! அதைத் தொடாதே !! அது எனக்குச் சொந்தம் !!! என்று அதிகாரமாக ஒரு குரல் தொனித்தது. குரல் வந்த பக்கம் திரும்பினார் நாபாகன் அங்கு கருப்பாக வாட்ட சாட்டமாக ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த நாபாகன், வினையமாக, ஐயா நீங்கள் யார் ? உங்களுக்கும் இப்பொருட்குவியலுக்கும் என்ன சம்பந்தம் ? இவையனைத்தும் முனிவர்களால் என் பொருட்டு தரப்பட்டனவாயிற்றே? ஆயினும் நீங்கள் உரிமை கொண்டாடுவது எப்படி? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன் எனக்கூறி மரியாதையுடன் அவர் குறித்து கைகூப்பி நின்றார். அதுவரை அங்கிருந்த கருப்பு உருவம் மறைந்து அவ்விடத்தில் சிவபெருமான் தகதகவென காட்சியளித்துக் கொண்டிருந்தார்.
பெருமானைக் கண்ட நாபாகன் அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான். சிவபெருமான் பேசலானார் மகனே ! எந்த யாகம் முடிந்தவுடன் எஞ்சிய பாகம் என்னைச் சேர்ந்ததாகும் இது உனக்குத் தெரியாதா? வேண்டுமானால் உன் தந்தையிடம் சென்று கேட்டு உறுதி செய்துக்கொள் எனக் கூறினார். மீண்டும் அவரை நமஸ்கரித்து நாபாகன். ஐயனே யாகத்தில் எஞ்சியது தங்களதே என எனக்குத் தெரிந்திருப்பினும் இப்பொருளனைத்தும் நீயே எடுத்துக் கொள் என முனிவர்கள் கூறியதாலும் முனிவர்கள் அவ்வாறு பொருளளிப்பார்கள் என என் தந்தை முன்னமே கூறியதாலும் இப்பொருளைத் தொட்டுவிட்டேன் எனினும் என் தந்தையைக் கண்டு இது குறித்து தெளிவு பெற்று வருகிறேன். அதுவரையில் தயை கூர்ந்து தாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் எனக்கூறி அவரை நமஸ்கரித்து தந்தையிடம் சென்றார்.
தந்தையை நமஸ்கரித்த நாபாகன் நடந்த அனைத்தையும் ஒப்புவித்தார். அவரும் மகனே ! முனிவர்கள் ஆறாம் நாள் அன்றே உனக்குத் தனம் தந்திருந்தால் அது உன்னுடையதே ஆனால் அவர்கள் யாகத்தில் எஞ்சியதை உனக்குக் கொடுத்தார்கள். யாகத்தில் எஞ்சியது எப்பொழுதுமே சிவபெருமானைச் சேர்ந்ததாகும். எனவே நீ சென்று அவரை வணங்கி பொருளனைத்தும் அவரிடமே ஒப்புவித்து வா எனக் கூறினார். தந்தையை வணங்கி மீண்டும் சிவபெருமான் இருந்த இடத்திற்கு வந்தார். சிவனை வணங்கி தம்மை மன்னித்து அருளுமாறு பொருளனைத்தும் தாங்களே எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான்.
அவனது விண்ணப்பத்தை ஏற்ற சிவபெருமான் நாபாகா! உன் ஞானத்தையும் வினயத்தையும் கண்டு நான் மகிழ்ந்தேன் உனக்குத் தர வேண்டிய பாகத்தைக் கொடுக்கவில்லை என்பதற்காக நீ உன் அண்ணன்களிடம் கோபிக்க வில்லை. தந்தையிடம் சென்று முறையிட்டபோது உன் பாகத்தை அடையும் எண்ணத்தை விட்டுவிடு என்று அவர் கூறியபோது, அவரிடமும் நீ கோபப்படவில்லை. ஆறாம் நாள் நீ நினைவூட்டிய போது மகிழ்ந்த முனிவர்கள் பரிசினை அன்றே கொடாதபோது அவர்களிடமும் நீ கோபிக்கவில்லை. இவையனைத்திற்கும் மேலாக ஆசையாகப் பொருட்குவியலைத் தொட்ட சமயத்தில் அதனைத் தடுத்த மாறுவேடத்தில் இருந்த என்னிடமும் கோபிக்கவில்லை. தந்தையிடம் தெளிவு பெற்று மீண்டும் என்னிடம் வந்து பொருளனைத்தும் உங்களுக்கே சொந்தம் எனக் கூறி வினையத்துடன் நிற்கும் உன் நேர்மையையும் ஞானத்தையும் கண்டு நான் மகிழ்வுற்றேன். ஆதலால் இப்பொருளனைத்தையும் உனக்கே அளிக்கிறேன் அது மட்டுமல்லாமல் உனக்கு ஞானத்தையும் போதிக்கிறேன் என்று கூறி அவனுக்கு ஞானோபதேசமும் செய்தார் அருளையும் பொருளையும் ஒருங்கே நாபாகனிடத்தில் ஒப்படைத்துவிட்டு சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment